விழுப்புரம்: பட்டியலின மக்கள் உள்ளே அனுமதிக்கப்படாத விவகாரத்தில் இரண்டாம் கட்ட விசாரனைக்காக விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகிய பட்டியலின தரப்பினர் ஆகஸ்ட் மாதத்திற்குள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தியும் இந்து மதத்திலிருந்து வெளியேறும்  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பழமை வாய்ந்த தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் செல்ல கூடாது என வன்னியர் தரப்பு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இரு சமூக மக்களிடையே பல மாதங்களாக மோதல் நிலவி வந்தது. இந்த மோதலை முடிவிற்கு கொண்டு வந்து பட்டியலின மக்களை திரெளபதி அம்மன் கோயிலுக்குள் அழைத்து செல்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த இரு சமூக மக்களிடையேயும் 8 முறை நடத்தப்பட்ட சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்பட்டது.


இதனையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்கும் வகையில் 145 சட்டப்பிரிவை பயன்படுத்தி பிரச்னைக்குள்ளான தர்மராஜா  திரெளபதி அம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். பிரச்சனைக்குள்ளான திரெளபதி அம்மன் கோயில் இருக்கும் இடம் தங்களுக்கு சொந்தமானது என இருசமூக மக்களும் பரஸ்பரம் போட்டி போட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில் அது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருத்தரப்பினரிடையேயும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் போதும் இருதரப்பிலும் சுமூக முடிவு எட்டப்படாததால் மீண்டும் மறு விசாரணை நடத்தப்படும் என்றும் அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் ஏற்கனவே பணியில் இருந்த விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய வருவாய் கோட்டாட்சியராக பிரவீணா குமாரி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பாக 2ஆம் கட்ட விசாரணை  7ஆம் தேதியான இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஒரு தரப்பைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்களான 5 பேருக்கு மட்டும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் விழுப்புரத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் விவகாரம் தொடர்பான 2ஆம் கட்ட விசாரணை ஒரு தரப்பினரிடயே 7 ஆம் தேதி நடைபெற்றது.


இந்த விசாரணையில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்ட 5 பேரும் நேரில் ஆஜராகினர். அப்போது திரெளபதி அம்மன் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊர் தரப்பில் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் சமூக தீர்வு காணப்பட்டு கோயிலை திறந்து பூஜை செய்ய வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் பட்டியலின தரப்பினரிடம்  இன்று விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவினா குமாரி தலைமையில் விசாரணை நடைபெற்றது.  விசாரணையில் கலந்து கொண்ட பட்டியலின தரப்பினர் விரைந்து கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்து மதத்திலிருந்து வெளியேற உள்ளதாக பட்டியலின தரப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.