விழுப்புரம் : விழுப்புரத்தில் தேர்தல் விதிகளை மீறி ஊர்வலமாக சென்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Continues below advertisement

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம், தனது கட்சியினருடன் ஊர்வலமாக சென்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் நேற்று மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் விதிகளை மீறி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருச்சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் விழுப்புரம் நகர கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் புகாரளித்தார். நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்டத் தலைவர் முனுசாமி உள்ளிட்ட 27 பேர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 20-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மொத்தம் 1,966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாளன்று இம்மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 12,095 அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Continues below advertisement