விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வந்தபோது, அமைச்சர் பொன்முடி தேர்தல் விதிமுறைகளை மீறி காரில் கூட்டணி கட்சி சின்னத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன்  அலுவலத்திற்கு வந்ததாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில்  புகாரளித்துள்ளதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம்:


தேர்தல் விதிமுறைகளை மீறிய அமைச்சர் பொன்முடி 


ஜெயிலுக்கு செல்ல வேண்டிய பொன்முடி நீதிமன்ற தீர்ப்பால் மீண்டும் அமைச்சராகியுள்ளார். அமைச்சர் பொன்முடி தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சின்னம் பொறிக்கப்பட்ட காரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்கிறார் பொன்முடி. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும், காவல் துறையும் வேடிக்கை பார்க்கிறது. ஆணவம் கூடாது, பொன்முடிக்கு அடக்கம் தேவை.


தற்போது தி.மு.க. அமைச்சர்கள் எல்லாம் தங்கள் மீதான வழக்குகள் குறித்து தான் பேசிக் கொள்கிறார்கள், தங்கள் துறையின் திட்டங்கள் குறித்தும், மக்கள் நலன் குறித்து பேசுவதில்லை. திமுக அமைச்சர்கள் எல்லாம் தற்போது பேயறைந்து போய்யுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மோடிக்கு அளிக்கக்கூடிய வாக்கு. திமுகவுக்கு அளிக்கும் வாக்கு, பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு.


பாஜகவில் இருப்பவள் எல்லாம் காந்தியா?


மாநிலத்தைப் பற்றி கவலைப்படாத திமுக அரசு, மக்களை பற்றி கவலைப்படாத பாஜக அரசு. மதத்தின் பெயரால் இன்றைக்கு நாட்டில் பிரிவினை வாதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் அரசு பாஜக. இன்றைக்கு நாடு ஒரு அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மீண்டும் மோடி, வேண்டும் மோடி என அண்ணாமலை சொல்கிறார்.


நாங்கள் சொல்கிறோம் வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி, வேண்டாம் மோடி. பாஜக ஆண்ட பத்தாண்டு காலமே போதும். பாஜக ஆண்டதும் போதும் மக்கள் கஷ்டப்பட்டது போதும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. பாஜகவை யாராவது எதிர்த்தால், வருமான வரித்துறை, அமலாக்குத்துறை, மத்திய புலனாய்வுத்துறை வரும். இந்த மூன்றும் தான் பாஜகவின் கூட்டணி கட்சிகள். பா.ஜ.க.வில் இருப்பவர்கள் எல்லாம் உத்தமர் காந்தியா? தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பிற்கே வராத பா.ஜ.க., அ.தி.மு.க. போட்ட பிச்சையால் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. அதற்குள்ளாகவே அனைத்து நிறுவனங்களை மிரட்டி பணம் வசூல் செய்யப்படுகிறது.