தமிழகம் தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28 முதல் நடைபெற தொடங்கி , வருகிற 4 ஆம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர் தீவிரமாகி வருகின்றனர். கூட்டணி கட்சியினரும் வார்டு ஒதுக்கீடு விவரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் முடிவு பெற்று வருகின்றனர்.




 

கடலூர் மாவட்டத்தில் நடக்கும் இந்த தேர்தலை பொட்டி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் கடலூர் மாநகராட்சிக்கு 152 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் 6 நகராட்சிகளிலும் 314 வாக்குச்சாவடி மையங்களும், 14 பேரூராட்சிகளில் 270 வாக்குச்சாவடி மையங்களும் என மாநகராட்சி நகராட்சிகள் பேரூராட்சிகள் மொத்தம் தலா 224 ஆண் பெண் வாக்காளர்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகள் மற்றும் 186 அனைத்து வாக்காளர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் என 726 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 133 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்டு அதற்கு கூடதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என மாவட்ட நிர்வாகம் கூறி உள்ளது.

 



 

இதில் கடலூா் மாநகராட்சியில் மொத்தம் 45 வாா்டுகளில், ஆண்கள்-68,205, பெண்கள்-74,225, இதரா்-49 போ் என மொத்தம் 1,42,479 வாக்காளா்கள் உள்ளனர். மேலும் 152 வாக்குச்சாவடிகள் உள்ளன.இந்த நிலையில் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தற்பொழுது தான் வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கி உள்ளனர், இந்நிலையில் கடலூர் மாநகராட்சி 20-வார்டு சார்பில் கடலூர் திமுக நகர செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரி திமுக தலைமை அறிவிப்பதற்கு முன்னதாகவே கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். வேட்புமனு தாக்கலின் பொழுது கட்சியின் பரிந்துரை கடிதம் இல்லாமல் சுயேட்சையாக திமுக கட்சி துண்டு அணிந்து வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்.

 

 


திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் அவரது மனைவி சுந்தரி


 

திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே கட்சியின் நகர செயலாளர் மனைவி வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுததியுள்ளது. இந்நிலையில் இவர் தான் கடலூர் மாநகராட்சியின் திமுக மேயர் வேட்பாளர் என்று அரசியல் வட்டாரங்கள் சார்பில் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.