கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாகவும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 19 ஆம் தேதி கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடி கடலூர் வங்க கடலில் சங்கமித்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது மேலும் சுமார் 5,500 ஹெக்டர் பரப்பளவில் விவசாய நிலங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.இதில் கடலூர், மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம், உச்சிமேடு, பெரிய கங்கனாங்குப்பம், சுப உப்பளவாடி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இருந்த குடியிருப்புகள், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. சில கிராமங்கள் தீவுகளாகவே மாறியது.
இதனை தமிழக அரசு ஏற்கனவே கணக்கெடுக்கும் பணிகள் நடத்தி வரும் நிலையில், உள்துறை இனை செயலர் ராஜுஷர்மா தலைமையிலான மத்திய குழுவினர் கடந்த 23 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் வெள்ளம் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரானது படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகளிலும் நீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது.கடந்த 19 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீரை தாண்டி வெள்ளம் சென்றது. இதனால் கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இந்த தண்ணீர் அனைத்தும் தாழங்குடாவில் வங்க கடலில் இணைந்தது. இதேபோல் கெடிலம் ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதில் அதிக பட்சமாக வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை சென்றது.
இந்த தண்ணீரும் தேவனாம்பட்டினம் முகத்துவாரம் வழியாக கடலில் வீணாக கலந்தது. நேற்று தென்பெண்ணை ஆற்றின் நீர் வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 600 கனஅடியாக இருந்தது. இதேபோல் கெடிலத்தில் வினாடிக்கு 3650 கனஅடி நீர் கடலுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த மழையால் தென்பெண்ணை ஆற்றில் இருந்து 30 டி.எம்.சி. தண்ணீரும், கெடிலம் ஆற்றில் இருந்து 10 டி.எம்.சி. தண்ணீரும் வீணாக கடலில் கலந்துள்ளதாக பொதுப்பணித்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த ஆறுகளில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டி மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் கொள்ளிடம், வெள்ளாறு வழியாகவும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருவது குறிப்பிடத்தக்கது.