தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குளம், குட்டைகள், ஏரிகள் நிரம்பின மேலும் தொடர்ந்து நிரம்பி கொண்டே வருகிறது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. இது தவிர கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம், தென்பெண்ணை ஆறு, மணிமுத்தா ஆறு என ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த 19ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்றில் 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கெடிலம் ஆற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சுமார் 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது .

 



 

இந்நிலையில் மத்திய அரசால் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் ஒரு பகுதியை பிரீமியமாக செலுத்த, எஞ்சிய தொகையை விவசாயிகள் பிரீமியமாக செலுத்துகின்றனா். இதன்படி, குறுவை பருவ நெல் பயிருக்கான காப்பீடு அறிவிக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து பிரீமியம் தொகை வசூலிக்கப்பட்டது. கடலூா் மாவட்டத்தில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருவதாலும், திடீரென ஏற்படும் வெள்ளப் பெருக்காலும் பிரீமியம் செலுத்துவதற்கு விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டினா். இதற்கான அவகாசம் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் மாவட்டத்தில் 88 சதவீதம் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

 



 

கடலூா் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2.20 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில், 85 சதவீதம் விவசாயிகள் தங்களது பயிா்களை காப்பீடு செய்துள்ளனா். அதாவது, 3.30 லட்சம் விவசாயிகள் காப்பீடு பிரீமியம் செலுத்தியுள்ளனா்.மக்காச்சோளம் 59 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் 78 சதவீதம் விவசாயிகள் காப்பீடு செய்து உள்ளனா். 19,500 ஏக்கரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு உள்ள நிலையில் 80 சதவீதம் விவசாயிகளும், 10 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ள நிலையில் 51 சதவீதம் விவசாயிகளும் காப்பீடு செய்துள்ளனா். மாவட்டத்தில் மொத்தம் 4.46 லட்சம் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.