கள்ளக்குறிச்சியில் தங்கராசு என்பவர் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் உயிரிழந்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. விஷச் சாராய வழக்கில் ஏற்கனவே கைதான கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெத்தனால் கலந்த சாராயம் குடித்த ஒருவர் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருனாகுளம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்ததில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு இந்த வழக்கை CBCID சிபிசிஐடிக்கு மாற்றிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் CBI சிபிஐக்கு மாற்றியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, பரமசிவம் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், கண்ணுக்குட்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர்கள் மீது 13 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர்களது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
மீண்டும் ஒரு கள்ளச்சாராய மரணம்...
இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் ஒரு கள்ளச்சாராய மரணம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி கடலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த தங்கராசு, கள்ளக்குறிச்சி அருகே உயிரிழந்து கிடந்தார். தொடர்ந்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது ரத்த மாதிரி சோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் சந்தேக மரணம் என கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கண்ணு குட்டி தாமோதரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பு
இந்த நிலையில் உடற்கூறு ஆய்வு அறிக்கைகளும், ரத்த மாதிரி சோதனை அறிக்கையின் அடிப்படையிலும் தங்கராசு மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் தான் உயிரிழந்தது தெரிய வந்தது. கண்ணுக்குட்டி, தாமோதரன் ஆகியோரிடம் சாராயம் வாங்கி குடித்ததால் தான் தங்கராசு உயிரிழந்தார் என்பதை போலீசாரும் உறுதி செய்தனர். ஏற்கனவே கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் விவகாரத்தில் கடலூர் மத்திய சிறையில் கண்ணு குட்டி தாமோதரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது நான்கு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் இருக்கும் நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இருவரும் கடலூர் மத்திய சிறையில் இருந்து கள்ளக்குறிச்சி அழைத்து வரப்பட்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் நான்காம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கள்ளச்சாராயம் மரணத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது அதே சம்பவத்தின் மூலம் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மீண்டும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.