விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று அமைச்சர் பொன்முடி எம்.பி ஜெகத்ரட்சகனுடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முதல்வர் மகளிருக்காக செய்த சாதனைக்காகவே மகளிரெல்லாம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்வார்கள் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் 21 ஆம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக திமுக நாம்தமிழர் கட்சி என முக்கிய மூன்று கட்சிகள் போட்டியிடுகின்றன. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாளிலிருந்து சுயேட்சை வேட்பாளர்கள் 9 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு தாக்கல் நான்காவது நாளான இன்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா விக்கிரவாண்டியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், சிவி கணேசன், எம்பி ரவிக்குமார், ஜெகத் ரட்சகன் ஆகியோர் வேட்பாளருடன் ஊர்வலமாக விக்கிரவாண்டி வேட்பு மனு தாக்கல் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, அமைச்சர் பொன்முடி, எம்பி ஜெகத்ரட்சகன், முன்னாள் எம்பி கெளதமசிகாமணி ஆகியோருடன் வருகை புரிந்து வேட்பு மனுதாக்கல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்பாளர் அன்னியூர் சிவா மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு பேட்டியளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா இன்று மனு தாக்கல் செய்துள்ளதாகவும் திமுக வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் முதல்வர் மகளிருக்காக செய்த சாதனைக்காகவே மகளிரெல்லாம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார்.
அதிமுகவிற்கு தோல்வி வரும் என்பதால் இடைத்தேர்தலில் விலகி விட்டதாகவும் பாமக மட்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகவும் கடந்த தேர்தலில் அதிமுக பாமக ஒன்றாக இணைந்து போட்டியிட்டதால மறைந்த சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் இந்தமுறை பாமக மட்டும் போட்டியிடுவதால் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என பொன்முடி நம்பிக்கை தெரிவித்தார்.