தந்தையின் அறுபதாவது வயதில், பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி பெற்றோருக்கு இந்த வைபவத்தை நடத்துவதால், இதை 'அறுபதாம் கல்யாணம்', 'மணிவிழா', 'சஷ்டியப்த பூர்த்தி' என்றெல்லாம் அழைப்பார்கள். இந்த நிகழ்வானது 60 வயது முடிந்து, 61-வது வயது தொடங்கும்போது நடத்தப்படுகிறது[tw]
[/tw]
ஒரே பள்ளியில் படித்த 108 பேர் மணிவிழா கொண்டாடிய நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடந்து உள்ளது. கள்ளக்குறிச்சியில் 1977-78ம் ஆண்டு10-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மொத்தம் 150 பேர் கொண்ட இந்த குழுவில் தற்போது 108 பேருக்கு 60 வயது முடிந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைவரும் கணவன் மற்றும் மனைவிகளுடன் இணைந்து தம்பதியராக கூடினர். அங்கு அனைவருக்கும் ஒரே மேடையில் 60-ம் திருமணம் நடைபெற்றது. மேலும் 60 வயது துவங்காத, 6 தம்பதிகளுக்கும் சஷ்டியப்த பூர்த்தி யாகம் நடத்தி அனைவருக்கும் மஞ்சள் கயிறு, தாலி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், இவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் ஆசுகவி ஆராவமுதன், சீனிவாசன், அய்யாக்கண்ணு, மணவாளன் ஆகியோர் பங்கேற்று ஆசி வழங்கினர்.