அமைச்சர் பொன்முடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை துவக்கி வைத்து, முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில்தான், பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதால் பெண்கள் தன்னம்பிக்கையுடனும், மனநிறைவுடனும் உள்ளார்கள் எனப் பேசினார்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (15.09.2023) காஞ்சிபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, தலைமையில், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சி, அரசு மேல்நிலைபள்ளி மைதானத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை துவக்கி வைத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.


உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து, பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாக செயல்படும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றினை கருத்திற்கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், குடும்பத்திற்கு ஆதாரமாகவும், உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவிகளையும், உழைக்கும் மகளிரின் நலனை கருத்திற்கொண்டும், அவர்களை பெருமைப்படுத்திடும் பொருட்டு, மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்கத் திட்டமான, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15 முதல் மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கப்படும் என தெரிவித்தார்கள். மேலும், இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு ரூ.7,000/- கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்கள்.


அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், அரசு வழங்கிய நெறிகாட்டு வழிமுறைகளை பின்பற்றி தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் பொருட்டு, 6,18,384 குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்திடும் பொருட்டு, முதற்கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 2,62,929 குடும்ப அட்டைதாரர்களும், இரண்டாம் கட்டமாக 05.08.2023 முதல் 13.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 2,06,309 குடும்ப அட்டைதாரர்களும், 18.08.2023 முதல் 20.08.2023 வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 28,482 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 4,97,720 குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இன்றைய தினம் காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்கமாக திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் 1,000 குடும்பத் தலைவிகளுக்கும், கண்டாச்சிபுரம் வட்டத்தில் 1,000 குடும்ப தலைவிகளுக்கும், செஞ்சி வட்டத்தில் 750 குடும்ப தலைவிகளுக்கும், மேல்மலையனூர் வட்டத்தில் 750 குடும்ப தலைவிகளுக்கு என மொத்தம் 3,500 குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.1,000/- பெறுவதற்கான வங்கி பற்று அட்டை இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000/- கட்டாயம் வழங்கப்படும். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தொகை வரப்பெறாதவர்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,சார் ஆட்சியர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை அணுகி விவரத்தினை தெரிந்து கொள்ளலாம்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தொடங்கி வைத்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 1 கோடியே 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப லைவிகள் பயனடையவுள்ளனர். இதன் மூலம், குடும்ப தலைவிகள் மற்றும் உழைக்கும் மகளிர் தங்கள் தேவைகளையும், அவர்களின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளையும் மேற்கொள்வதற்கு வழிவகை ஏற்படும்.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆட்சியில்தான், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை, பெண்கள் உயர்கல்வி பயிலவேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.1,000/- ஊக்கத்தொகை, உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு, கிராமப்புற ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் போன்றவற்றினை செயல்படுத்தி, அனைத்து விதத்திலும் பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு வழிவகை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள்.


எனவே, இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள மகளிர்கள் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திய அனைத்துத் திட்டங்களையும் நல்ல முறையில் பயன்படுத்தி, சமூகத்தில் சம உரிமை பெற்று திகழ்வதுடன், தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்ற வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.