கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்புகிறது. மேலும் தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 3 மாதங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்டது.
தற்பொழுது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக காலமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறுகின்ற தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து வருகிறது.
இதனால் கடந்த மூன்று மாதங்களாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வருகிறது. தொடர்ந்து கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருவதால், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றில் கூடுதலாக தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இந்த நீர்வரத்தால், நவலை, பெரமாண்டப்பட்டி, தொட்டம்பட்டி, எம்.வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக அரூர் பகுதியில் நிரம்பி வரும் தடுப்பணைகள்-விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதில் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலையடிவார கிராமங்களில் உள்ள ஆறுகள், தடுப்பணைகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரூர் அடுத்த தீர்த்தமலை பகுதியிலுள்ள சிறிய மலைகளில் இருந்து ஆறுகள், ஓடுகள் உருவாகி, தென்பெண்ணை ஆற்றில் இணைகிறது. இதனால் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையில் ஆறுகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் வரட்டாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வெப்பம்பட்டி வனப் பகுதியில் உள்ள ஜல்லூத்து வெள்ளம் கரைபுரண்டு ஆற்றில் செல்கிறது. இதில் மாம்பாடி அருகே உள்ள தடுப்பணை நிரம்பியுள்ளது. இதேபோல் கூடலூர் மற்றும் பொய்யப்பட்டி பகுதியில் உள்ள தடுப்பணைகளும் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், அரூர் பகுதியில் உள்ள பல்வேறு தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் ஆற்றில் செல்கிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த ஆற்றில் செல்லும் வெள்ளம் தென்பெண்ணை ஆற்றில் கலந்து சாத்தனூர் அணைக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.