கடலூர் மாவட்டம் நெய்வேலியை தலைமையிடமாக கொண்டு பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் தமிழகம் முழுக்க 51 கிளைகளுடன் இயங்கி வருகிறது. கடந்த 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் படிப்படியாக வளர்ந்து தற்போது நிதி நிறுவனம் மட்டுமில்லாமல் திரையரங்குகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், ஹோட்டல்கள் என தமிழகம் முழுவதும் இந்த குழுமத்திற்கு சொந்தமான பல்வேறு தொழில்கள் தற்பொழுது ஜெயப்பிரியா குழுமத்திற்கு சொந்தமாக இயங்கி வரும் நிலையில். கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கல்வி நிலையங்கள், சிட் ஃபண்ட் கம்பெனி, உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், வடலூர், திட்டகுடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிளைகளில் ஜெயப்பிரியா குழுமத்திற்கு சொந்தமான சிட் ஃபண்ட், கல்வி நிறுவனம் போன்ற இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெயப்பிரியா குழும நிதி நிறுவன உரிமையாளர் ஆன ஜெய்சங்கர் அவர்களின் வீடு மற்றும் அவரது நண்பர்களின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களிலும் இந்த வருமான வரி துறை சோதனை ஆனது நடைபெற்று வருகிறது.
சுமார் 80 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலையில் இருந்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களில் கடந்த சில மாதங்களாக அதிக வரி ஏய்ப்பு நடந்ததாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜெயப்பிரியா நிதி நிறுவன குழுமத்தின் உரிமையாளர் ஜெய்சங்கர் தேமுதிக பிரமுகர் ஆவார் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதிவிக்கு தேமுதிக சார்பாக நின்று தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது திடீர் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் நிலையில், தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற ஜெயப்பிரியா குழுமத்தில் வருமான வரி துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.