கஞ்சா கடத்தலை தடுக்க புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது போதை பொருளுடன் வந்த வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் சிக்கினர். புதுச்சேரியில் சமீப காலமாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக காவல் துறையில் ’ஆபரேஷன் விடியல்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.




புதுச்சேரியில் கஞ்சா வழக்கில் சமீபத்தில் கைதான 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அருக்கா என்கிற பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக தெரிவித்தனர். இந்த நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து விசாகப்பட்டினம் வழியாக புதுச்சேரிக்கு ரயில் வந்தது. போதைப் பொருள் தடுப்பு மற்றும் ரவுடிகள் தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் மோப்பநாய் உதவியுடன் ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளின் உடமைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் தீவிர சோதனை செய்தனர்.




அப்போது ரயிலில் வந்த 3 பேர் சாக்கு மூட்டையில் தங்கள் உடமைகளுடன் சேர்த்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை எடுத்து வந்தது தெரிய வந்தது. போலீசார், அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த புனே பிகிரா (29), டிபுன் பிகிரா (39) பெபிரோ சிங் (50) என்பது தெரிய வந்தது. அவர்கள் தங்கள் பயன்பாட்டிற்காக புகையிலை பொருட்களை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ எடை உள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.




பிடிபட்ட 3 பேரும் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலை மற்றும் கொள்ளை விபச்சாரம் போன்றவை கடந்த சில மாதங்களாக தலைதூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது இதனால் புதுச்சேரி வாழும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர









ட்விட்டர் பக்கத்தில் தொடர