பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயமானதால் நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.


தமிழ்நாட்டில் எஸ்.பி.யாக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்தார். அப்போது அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி ஒருவர், அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மாவட்ட எஸ்.பியாக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி, சிறப்பு டிஜிபியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது பெண் ஐபிஎஸ் அதிகாரியை தனது காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த திரிபாதியிடமும், உள்துறைச் செயலாளரிடமும் புகார் அளித்தார்.


இந்நிலையில், சிறப்பு டிஜிபி மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச்செயலாளர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இப்புகார் குறித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க அப்போதைய டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து, பெண் ஐபிஎஸின் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.


இதனையடுத்து புகாருக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி , அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்பி  ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது


இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சியடைந்தார். பெண் எஸ்பி, முன்னாள் சிறப்பு டிஜிபி இடையே நடந்த உரையாடல், வாட்ஸ் அப் தகவல்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை ஆக.25-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.


மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சிகளான விக்கிரவாண்டி, செங்குறிச்சி, பரனூர் ஆகிய சுங்கச்சாவடிகளை சேர்ந்த ஊழியர்கள் 5 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களது சாட்சியம் முழுவதையும் நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகளான ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரதீப்குமார், வருண்குமார் மற்றும் போலீஸ்காரர் கணபதி ஆகிய 3 பேரும் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண