பாஜக ஆட்சியை முடிவு கட்ட ஜிஎஸ்டி மட்டும் போதும் - நாஞ்சில் சம்பத்
அதிமுக தலைமையை பன்னீர்செல்வம் ஏற்பதற்கு சசிகலாவிற்கு எந்த தயக்கமும் இருப்பதாக தெரியவில்லை - நாஞ்சில் சம்பத்
Continues below advertisement

நாஞ்சில் சம்பத்
கனியாமூர் கலவரத்திற்கு பின்னால் பாஜக உள்ளதாக நாஞ்சில் சம்பத் கடலூரில் பேட்டியளித்துள்ளார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் கடந்த 2018-ல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசிய போது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அவதூறாக பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வழக்கை ரத்து செய்ய அரசாணை பிறப்பிக்க தமிழக முதல்வரிடம் மனு அளித்துள்ளேன், இவ்வழக்கு ரத்தாகும் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் பண அரசியலுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு பாடை கட்டியுள்ளது. பணத்தை வைத்து ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சியை கபளீகரம் செய்ய முயன்ற எடப்பாடிக்கு உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதால் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையில் மண் விழுந்துள்ளது என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் கையில் கட்சி வந்துவிட்டது. ஓபிஎஸ் ஆல் தான் கட்சியை காப்பாற்ற முடியும், என்பதுதான் தொண்டர்களின் எண்ணம். பணத்தை வைத்து தொண்டர்களை வாங்க நினைத்த எடப்பாடி பழனிசாமி அரசியலில் காணாமல் போகின்றார், அவர் அரசியல் அனாதை ஆக்கப்படுவார் என்று கூறினார். மேலும், சசிகலா பிறந்தநாளில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு நம்பிக்கை அளித்திருக்கும் எனவும், அதிமுக தலைமையை பன்னீர்செல்வம் ஏற்பதற்கு சசிகலாவிற்கு எந்த தயக்கமும் இருப்பதாக தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாஜக ஆட்சியை முடிவு கட்ட ஜிஎஸ்டி மட்டும் போதும். டைமண்ட் மாஃபியாக்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. பிணத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கின்றது பாஜக. கனியாமூர் கலவரத்திற்கு பின்னால் பாஜக உள்ளது என தோன்றுகிறது. இவர்களை மக்கள் தூக்கி எரிவார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு இல்லை என்றால் எம்எல்ஏக்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் வருவார்கள். அதிமுக பலவீனப்பட வேண்டும் சிதைய வேண்டும் என அந்தக் கட்சிக்குள் ஊடுருவி அதை அழித்துவிட்டு அந்த இடத்தில் பாஜக வரவேண்டும் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி பலியாகியுள்ளார்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.