விழுப்புரம்: திருநங்கைகள் விரைவில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், எம்பியாக வருவார்கள் என எதிர்பார்ப்பதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும்  சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்வு கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. கூத்தாண்டர் கோவிலின் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நிகழ்வு நாளையும் நாளை மறுநாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. கூவாகம் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மலேசியா,  சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான  திருநங்கைகள் கூவாகத்திற்கு வருகை புரிகின்றனர்.  


திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் மிஸ் கூவாகம் போட்டி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மதிவேந்தன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி அதிமுக ஆட்சியில் திருநங்கைகள் நலவாரியம் முடக்கப்பட்டிருந்ததாகவும் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நலவாரியம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் திருநங்கைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் விரைவில் பரிசீலிக்கப்படும் திருநங்கைகள் மாத ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருநங்கைகள் விரைவில் சட்டமன்ற் உறுப்பினர்களாகவும், எம் பியாக வருவார்கள் என எதிர்பார்ப்பதாக விளையாட்டு துறை அமைச்சர்   உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிஸ்கூவாகம் போட்டியானது மழையால் ரத்து செய்யப்படதையொட்டி நாளை கூவாகத்தில் நடைபெறும் என தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.