விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் 2023 ம் ஆண்டுக்ககான அழகி போட்டி நடைபெற்றது. திருநங்கைகளுக்கான சித்திரை திருவிழா, கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் கடந்த 2 நாட்களாக விழுப்புரம் நகரில் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.
மிஸ் கூவாகம் நிகழ்ச்சி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து மிஸ் கூவாகம் நிகழ்ச்சியை நடத்தியது. காலை 10 மணியளவில் திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பாடலுக்கேற்ப நடனமாடி அசத்தினார்கள். அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக மற்ற திருநங்கைகள் குத்தாட்டம் ஆடினார்கள்.
நிகழ்ச்சியில் விழுப்புரம், கடலூர், சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மற்றும் புதுச்சேரி, புனே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 15 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இப்போட்டியின் முதல் சுற்றில் நடை, உடை, பாவணை ஆகியவற்றின் அடிப்படையில் திறமையாக செயல்பட்ட திருநங்கைகள் 7 பேர் 2-ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து திருநங்கைகளின் பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் அழகிப்போட்டி தொடங்கியது. 2-வது சுற்று அழகிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 7 பேரும் மீண்டும் மேடையில் ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களில் மிஸ் கூவாகமாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக இவர்கள் 7 பேருக்கும் பொது அறிவுத்திறன் குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த நிரஞ்சனா திருநங்கை மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.சென்னையை சார்ந்த திஷா இரண்டாம் இடத்தினையும், சாதனா சேலம் மூன்றாம் இடத்தினை பிடித்து மிஸ் கூவாகம் பட்டத்தினை வென்றனர். சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அழகிகளாக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை திஷா தான் திருநங்கை என்று கூறியபோது தனது சகோதர்களே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தனது தாய் மட்டுமே ஏற்றுகொண்டதாகவும் சமூகத்தில் இருப்பவர்கள் ஆயிரம் கேலி கிண்டல் செய்தாலும் இன்று வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், திருநங்கைகளின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் எனவும் உலகளவில் நடைபெறுகிற ரேம்ப் வாக்கில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுமென்பது தனது ஆசை எனது தெரிவித்தார்.