விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதியான  வண்டிமேடு ரயில்வே கேட் கம்பத்தில் நில், STOP என்று எழுதி இருந்ததில் "நில் "என்ற தமிழ் வார்த்தை அழிக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம், தெலுங்கில் நில் என்று குறிப்பிடப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே துறையில் பல்வேறு இடங்களில் தமிழகத்தில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் பெயர்பலகைகள் எழுதப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், விழுப்புரம் நகர பகுதியான வண்டிமேடு ரயில்கேட்டில் பழைய வாகனங்கள் நிறுத்தும் கம்பம் அகற்றப்பட்டு புதியதாக கம்பம் செப்பனிடபட்டன. அந்த கம்பத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்காக நில் என்பதை தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்திலும் என மூன்று மொழிகளில் எழுதி வந்தனர். தற்போது வண்டிமேடு ரயில்வே கேட்டில் நில் என்று எழுத்தப்பட்ட இடத்தில் தமிழ் மொழியை அகற்றிவிட்டு இந்தி, தெலுங்கு ஆங்கிலத்திலும் நில் என்பதை குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சிக்குள்ளானதை அடுத்து தமிழ் மொழி நீக்கப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிருப்தியை ஏற்படுத்தியது.


மக்கள் அதிருப்தியை தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தினர் உடனடியாக தெலுங்கு மொழியில் நில் என்று குறிப்பிடப்பட்டு இருந்த இடத்தில் தமிழ் மொழியில் ஸ்டிக்கர் மூலம் குறிப்பிட்டு ஒட்டி மறைத்தனர். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, வண்டிமேடு பகுதியில் புதியதாக ரயில்வே கேட் புனரமைப்பு பணியினை ஆந்திராவை சார்ந்த நபர் மேற்கொண்டதால் அவர் வழக்கம்போல் தெலுங்கு, இந்தி, ஆங்கிலத்தில் எழுதி விட்டதாக விளக்கமளித்தனர். மேலும் தொடர்ந்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பதாகை முழுமையாக அகற்றப்பட்டு புதிய பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில்வே கேட்டில் தமிழ் மொழியை நீக்கிவிட்டு மூன்று மொழிகளில் நில் என்பது குறிப்பிடப்பட்டிருந்த சம்பவத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.