விழுப்புரம்: விழுப்புரம் அருகே தொடர் கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. துணை மின் நிலையம் மற்றும் மின்னூட்டிகளில் ஏற்பட்ட பழுது காரணமாக பல மணி நேரமாக மின்சாரமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

 

வங்கக் கடலில் நிலவி வரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மரக்காணம், வானூர், கண்டமங்கலம், திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் கன மழையின் காரணமாக கெடார் துணை மின் நிலையத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்பட்டுள்ளது.

 

இதேபோல் ஆங்காங்கே உள்ள மின்சார பீடர் எனப்பட கூடிய மின்னூட்டிகளிலும் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களிலும் இன்று அதிகாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மரக்காணம், சிறுவாடி,வானூர்,மேலும்  விழுப்புரம் அருகே உள்ள காணை, வெங்கந்தூர், கெடார், சித்தாமூர், வாழப்பட்டு, மாம்பழப்பட்டு, கோனூர், கல்பட்டு, தும்பூர், செங்காடு, இளங்காடு, மேலகொந்தை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று அதிகாலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல மணி நேரமாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மின்னூட்டிகளில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதில் மின் வாரிய ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மழையின் தாக்கம் சற்று குறைந்த பிறகு பழுதுகள் சரி செய்யப்பட்டு, விரைவாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார வாரிய அதிகாரிகள் தரப்பில் இருந்து நமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.