புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான கோப்பு மத்திய உள்துறைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 


ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:


”புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் இது தொடர்பாக ஒரு சில ஊடகங்களில் சிலரால் புரிதலற்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியின் போது மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கருத்து முன்வைக்கப்பட்டபோது அப்போது இருந்த துணைநிலை ஆளுநர் அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில் கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அன்றைய சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அந்த வரைவிற்கு சில் காரணங்களால் ஒப்புதல் அளிக்கவில்லை.


ஆனால், இந்த ஆண்டு சென்டாக் மருத்துவக் கல்வி மாணவர்ச் சேர்க்கை தொடர்பான கோப்பு துணைநிலை ஆளுநர் அலுவலகத்திற்கு வந்தபோது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான கருத்தை மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் முன்வைத்தார்.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் துணைநிலை ஆளுநரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு வரும் சூழ்நிலையில் 10 % இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கோப்பு உடனடியாக புதுச்சேரி அமைச்சரவையின் தீர்மானத்தோடு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.


ஏற்கனவே, வேறு சில காரணங்களுக்காக இடஒதுக்கீடு தொடர்பான கோப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்காமல் இருந்த நிலையில், தற்போதைய கோப்பும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் எற்பட்டது. அதன்படி கோப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு சிலர் கூறுவதுபோல நிர்வாக ரீதியாக இந்த நிலையில் மத்திய அரசுக்கு அனுப்பாமல் மாநில அளவில் முடிவெடுப்பது சாத்தியமில்லை.


மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்ட நாள் முதல் துணைநிலை ஆளுநர் அலுவலகம், தலைமைச் செயலர், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் அதற்கான ஒப்புதல் பெறுவதற்கான பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். துணைநிலை ஆளுநரும் தனிப்பட்ட முறையில் அதில் அக்கறை கொண்டு ஒப்புதல் விரைவில் கிடைப்பதற்காக உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.


இத்தகைய முயற்சியின் காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்விச் சேர்க்கையில் 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு குறித்த காலத்திற்குள் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று உள்ளார்த்தமான அக்கறையோடு செயல்பட்டு வருகிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்”


என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.