தமிழகத்தில் நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது அதன்படி, கடலூர் மாவட்டத்திலும் ரெட்டிச்சாவடி, நெல்லிக்குப்பம், ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, பண்ருட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் பெய்ய தொடங்கிய மழை தற்பொழுது வரை பெய்து கொண்டு இருக்கிறது. இதுவரை கடலூர் மாவட்டத்தில் 105 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது அதில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டை பகுதியில் 39 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் இதர பகுதிகளில் சராசரியாக 6 மில்லி மீட்டர் மழையானது பதிவாகி உள்ளது.



 

இந்த மழை மேலும் தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் கடலூர் அடுத்த சாமியார்பேட்டை பகுதியில் உள்ள சுமார் 10 மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்று உள்ளனர். பின் மீன்பிடித்து விட்டு கரைக்கு வந்த மீனவர்கள், தாங்கள் பிடித்த மீன்களை வலையிலிருந்து எடுத்து வந்துள்ளனர் அப்போது கடற்கரையோரம் மீன்களை பிரித்துக்கொண்டு இருந்த பொழுது திடீரென இடி தாக்கி சுமார் 9 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கு இருந்த மற்றவர்கள் அவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் பின் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில் சாமியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மட்டும் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மற்ற மீனவர்கள் அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் மழையினால் மிகவும் பாதிக்கப்படும் மாவட்டம் ஆகும்.



 

அதனால் கடலூர் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முதற்கட்டமாக சாலை ஓரங்களில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்து விரிவாக்கம் செய்யும் பணி சிறிது நாட்களுக்கு முன் வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தால் தொடங்கி வைக்கப்பட்டு மாவட்டத்தின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இது மட்டும் இன்றி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

அது மட்டும் இன்றி இனி வரும் காலங்களில் மழை, புயல், என எது வந்தாலும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என மக்களிடத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது, மேலும் இவ்வாறு மழை பெய்யும் காலங்களில் இடி மின்னல் தாக்கும் அபாயம் உள்ளதால் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.