கடலூரில் முதல் முறையாக  புத்தக சந்தை திருவிழாவை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே கணேசன் திறந்து வைத்தார்.

 

புத்தகங்களின் வாசிப்பை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் புத்தகத் திருவிழா நடைபெறும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  அதன்படி, கடலுார் மாவட்ட நுாலகத் துறை சார்பில் கடலூரில் முதலாம் ஆண்டு புத்தக சந்தை திருவிழா மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், கண்காட்சியை துவக்கி வைத்தார்.

 

இந்த புத்தகக் கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு சிறந்த பதிப்பகங்கள் மற்றும் வெளியிட்டார்கள் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் உள்ளது. 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த புத்தகச் சந்தை திருவிழாவில்  தினமும் ஒரு சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவு, பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

 

இந்நிகழ்ச்சியில் என்எல்சி இயக்குனர், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் பங்கேற்றனர். புத்தகத் திருவிழாவில்   பேட்டியளித்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே கணேசன்,” இளைஞர்கள், பொதுமக்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மாவட்டம் வாரியாக புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளார். நமது வரலாறு, பண்டைய கால நாகரிகம், பண்பாட்டை தெரிந்து கொள்ள புத்தகம் படிக்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் பெயரை தெரிந்து கொள்ள இன்றைய சமுதாயத்தினர் புத்தகம் படிக்க வேண்டும். புத்தகம் படிப்பது இன்றியமையாதது ஒன்றாகும். இல்லம் தேடி மருத்துவம் போன்ற பல சிறந்த திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். எண்ணங்கள் சிதறாமல் இருக்க மனதை ஒருநிலைப்படுத்த புத்தகம் படிப்பது சிறந்த வழியாகும்” எனக் கூறினார்.