விழுப்புரம்: மரக்காணம் அருகே கந்தாடு பகுதியில் ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 5க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


கனமழையால் போக்குவரத்து பாதிப்பு 


ஃபெங்கல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கிய கனமழை விடியும் வரை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மரக்காணம் அருகே உள்ள கானிமேடு பகுதியில் இருந்து மண்டகப்பட்டு அகரம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுப்பேட்டை, அகரம், மண்டகப்பட்டு ஆகிய கிராமங்களில் இருக்கும் மக்கள் செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு வழியாக 25 கிலோமீட்டர் சுற்றி மரக்காணம் வருகின்றனர். ஓங்கூர் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரானது மரக்காணத்தில் உள்ள கிராமத்தின் வழியாகச் சென்று பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் கலந்துவிடும்.


Fengal Cyclone LIVE Updates | ஃபெங்கல் புயல் LIVEFengal Cyclone LIVE Updates | ஃபெங்கல் புயல் LIVE


இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஓடையில் தூர்வாரப்படாமல் இருந்ததால் நீரானது விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் சேதமடைந்தது. மேலும் அப்பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது வரை பாலம் கட்டும் பணியானது ஆமை வேகத்தில் நடைபெற்ற வருகிறது.


வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது இன்று மாலை புயலாக உருமாற உள்ளது. இதற்கு ஃபெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  


ஃபெங்கல் புயல் சென்னை – பரங்கிப்பேட்டை அருகே கரையைக் கடக்கும் என்றும் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஃபெங்கல் புயல் எச்சரிக்கை:


மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “ தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையிலிருந்து, சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இது வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தற்போது, சுமார் 10 கி.மீ., வேகத்தில் புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.


அதிகனமழைக்கான எச்சரிக்கை:


27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர். திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


28-11-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


29-11-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.