விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகே நிலத்தகராறில் தம்பி மற்றும் அவரது மைத்துனரை குத்திக் கொலை செய்த அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நிலத்தகராறில் தம்பி மற்றும் அவரது மைத்துனரை கொலை செய்த அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகே உள்ள தச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமியின் மகன்களான முத்து கிருஷ்ணன்(42) மற்றும் ஏழுமலை (35) ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அண்ணன் முத்துகிருஷ்ணனுக்கும், அவரது தம்பி ஏழுமலைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அண்ணன் முத்துக்கிருஷ்ணன், தனது தம்பி ஏழுமலையை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்தது
இதனைக்கண்டு ஓடிச் சென்று தடுக்க முயன்ற ஏழுமலையின் மைத்துனர் முருகனையும் முத்துக்கிருஷ்ணன் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ஏழுமலையும், அவரது மைத்துனர் முருகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் தங்கமணி ஆகிய இருவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திண்டிவனத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் நிலத்தகராறில் சொந்த தம்பியையும், அவரது மைத்துனரையும் கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் முத்துகிருஷ்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து நீதிபதி முபாரக் பரூக் தீர்ப்பளித்தார். மேலும் இக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முத்துகிருஷ்ணனின் மகன் தங்கமணி விடுதலை செய்யப்பட்டார். இரட்டை கொலை வழக்கில் அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.