ஃபெஞ்சல் புயலானது காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ந்து சென்றது. இதனால் விழுப்புரத்தில்  அதிகனமழையானது கொட்டித் தீர்த்தது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து , திருவண்ணாமலை நோக்கி சென்று விட்டது.


இந்நிலையில், விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் அதீத வேக காற்று மழையால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின.இதனால் சில சாலைகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும், வெள்ளநீரால் விழுப்புரம் - செஞ்சி இடையிலான சாலைப் போக்குவரத்தானது பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, அங்கு வெள்ள நிவாரண பணிகளில் அரசாங்கம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. 


குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் மைலம், மரக்காணம் உள்ளிட்ட இடங்களில் மிகத் தீவிர மழை பெய்ததன் காரணமாக பல இடங்கள் வெள்ளக் காடாக மாறின. இதனையடுத்து, அரசின் சார்பில் வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளை கவனிக்க விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், செந்தில்பாலாஜி வந்துள்ளனர்.


சென்னையில் இருந்து விழுப்புரம் விரைந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் நகரம், மரக்காணம், கோட்டகுப்பம், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன், வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டதோடு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தற்காலிக நிவாரண முகாமில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி, பிரட், பிஸ்க்ட், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.


செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், விழுப்புரத்தில் தற்போது வரை  மழை விடவே இல்லை. 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. முதல்வரின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் நான் இங்கு வந்துள்ளோம். விழுப்புரம் பேருந்து நிலையத்தில் சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கிவிடும்.


60 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளதோடு, தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இருந்தாலும் கூடுதல் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்ற அறிவுறுத்தியுள்ளோம். ஆனால், மழை விட்டால் மட்டுமே தண்ணீர் வடியும் என்ற சூழல் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக உயரத்தை அதிகப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து பரிசீலனை செய்யப்படும். இதனை முடித்துக்கொண்டு கடலூர் மாவட்டத்திற்கும் ஆய்வுக்காக செல்ல உள்ளோம் என தெரிவித்தார்.


வயல்களில் நீர் புகுந்ததால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனரே என்ற கேள்விக்கு, மழை விட்ட பிறகு மூன்று நாட்கள் கழித்து விவசாயிகளை வரவழைத்து ஆலோசனை செய்வோம். கள ஆய்வு நடத்தி பயிர் சேதங்களை மதிப்பீடு செய்த பிறகு விவசாயிகளுக்கு அதற்கான இழப்பீடு கண்டிப்பாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை.


01-12-2024:


வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் சுன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


02-12-2024:


தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


நீலகிரி, கோயம்புத்தூர், 'திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


03-12-2024:


தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


04-12-2024:


தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


05-12-2024 முதல் 07-12-2024 :


வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.