கொட்டி தீர்த்த கனமழை - மிதக்கும் வடமாவட்டங்கள்


கடலூர் மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல். கொட்டி தீர்த்த கனமழையால் திடீர்குப்பம், குண்டுசாலை, செம்மண்டலம், வெளிச்செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி. விழுப்புரத்திலும் கனமழை கொட்டியதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மலையடி வார வீட்டின் மீது பாறை விழுந்ததில், மண்ணில் புதைந்த 7 பேரை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.


விழுப்புரம்: முதலமைச்சர் விடியோ காலில் ஆய்வு


விழுப்புரத்தில் கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகள் நீரில் மூழ்கின. அரகண்டநல்லூர், மணம்பூண்டி மற்றும் ஓம் சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகள் தனித்தீவு போல காட்சி அளிக்கின்றன. நேரில் ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வீடியோ காலில் தொடர்புகொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.



ஊத்தங்கரையில் வரலாறு காணாத மழை


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணி நேரத்தில் 50.3 செ.மீ மழை கொட்ட் தீர்த்துள்ளது. இதனால் ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை கிரேன் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.


நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ்


ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் பற்றி விவாதிக்க வேண்டும் என மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. மழை பாதிப்புகளை மதிப்பிட ஒன்றியக் குழு ஒன்றை அனுப்ப முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளது குறித்தும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல்


கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுவுடன் ஒப்பிடுகையில் இது 8.5 சதவீதம் அதிகம் என்றும் உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் அதிக வருவாய் ஈட்டியதன் மூலம் இது சாத்தியமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பம்பா ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை


இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சபரிமலை, பம்பை, எருமேலி ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும், 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. எனவே, பம்பா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆறுகளில் இறங்கவும், குளிக்கவும் தடை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


முதலமைச்சர் பதவிக்கு தீர்வு?


மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை தீர்மானிப்பதில் இழுபறி நீடிக்கிறது. ஷிண்டேவின் மகனுக்கு துணை முதலமைச்சர் பதவி தந்து, பிரச்னையை தீர்க்க பாஜக திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்றைக்குள் அடுத்த முதலமைச்சர் யார் என்பது இறுதியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாகிஸ்தானில் 130 பேர் பலி


பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் குர்ராம் மாவட்டத்தில், கடந்த மாதம் 21ம் தேதி  ஒரு பிரிவினர் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 57 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. அதன் விளைவாக இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


கால்பந்து ரசிகர்களிடையே மோதல் - 100 பேர் பலி


கினியா நாட்டின் என்சரிகோரில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியினை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துக்கொண்டு இருந்தனர். போட்டியின்போது நடுவர் சர்ச்சையான தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரு அணி ரசிகர்களுக்கும் இடையே வெடித்த மோதல் வன்முறையாக மாறியது. மைதானம் மட்டுமின்றி, மைதானத்திற்கு வெளியேயும், சாலைகளிலும் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுமார் 100 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் அடிப்படையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார் என்பதில் பெரும் இழுபறி நிலவுகிறது. இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு நியூசிலாந்திற்கு மங்கியுள்ளது. அதேநேரம், இந்திய அணிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.