தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட தமிழக அரசின் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது வழக்கம். இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணம் மற்றும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி, திராட்சை உள்ளிட்டவை இடம்பெறும். இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

 

பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கதுடன் பச்சரிசி, சர்க்கரை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 

இந்த அறிவிப்பு எப்படியும் பொங்கல் பரிசு தொகுப்பில் பன்னீர் கரும்பு வழங்குவார்கள் எப்பொழுதும் போல பன்னீர் கரும்புகளை அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி,குள்ளஞ்சாவடி பத்திரக்கோட்டை சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த கரும்பு விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் அளவிற்கு பன்னீர் கரும்புகளை பயிர் செய்திருந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின்  இந்த அறிவிப்பு கரும்பு விவசாயிகளிடையே மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 

இந்த முறை பச்சரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே தருவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்த நிலையில் பன்னீர் கரும்புகளை அரசு கொள்முதல் செய்து வழங்க வேண்டும் எனவும், இந்த தைத்திருநாளை நம்பி அரசு மானியம் இன்றி கரும்பை பயிர் செய்திருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். முதல்வரின் உத்தரவால் ஏமாற்றமடைந்த கரும்பு விவசாயிகள் தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கடலூர் விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் குள்ளஞ்சாவடி என்ற இடத்தில் சுமார் 250க்கும்  மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

சாலை மறியல் ஈடுபட்ட விவசாயிகள் ஒரு கையில் கரும்பையும், மறுக்கையில் பூச்சி மருந்து பாட்டில் வைத்து அரசு பன்னீர் கரும்பை  கொள்முதல் செய்ய வேண்டும், பொங்கல் தொகுப்போடு கரும்பும் வழங்க  வேண்டும் என தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

 

அதேபோல விவசாய குடும்பத்தை சார்ந்த பெண்கள் சாலையில் கரும்பை வைத்து ஒப்பாரி வைத்து அழுதும், மண் சோறு சாப்பிட்டும், தங்களது எதிர்ப்பை காட்டினார். சுமார் 2 மணி நேரமாக நீடித்த இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடலூர் விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் ஆனால் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இங்கு இருந்து கலைந்து செல்வதாக விவசாயிகள் தெரிவித்ததால் பரபரப்பு நீடித்தது.