புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஏழை மாரியம்மன் கோவில் அருகே புதிதாக ரேஸ்டோபார் பப்பு நடனத்துடன் கூடிய பார் திறக்க புதுச்சேரி கலால்துறை அனுமதி வழங்கி இருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மதுபாரை திறப்பதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் வந்ததும் அப்பகுதி பெண்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மதுக்கடை உடைத்து அங்கிருந்த பொருட்களை உருட்டு கட்டையால் அடித்து உடைத்து நொறுக்கினர்.
இதனை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் நடுரோட்டில் அமர்ந்து நடுரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனும் போராட்டத்தில் பங்கேற்றார். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனிடமும், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மதுக்கடை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த நிலையில் மதுக்கடையை சூறையாடியது, ஊழியர்களிடம் தகராறு செய்தது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து கொண்டது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மதுக்கடை ஊழியர்களை தாக்கிய காயப்படுத்திய விநாயகம் என்ற சங்கர் மற்றும் சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்