புதுச்சேரியின் பிரபல தாதா மர்டர் மணிகண்டனின் மனைவி பதமாவதி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். புதுச்சேரி பாஜக மாநில தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் மர்டர் மணிகண்டன் மனைவியை கட்சியில் நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இணைத்துள்ளனர். மர்டர் மணிகண்டன் மனைவியை இருசக்கர வாகனத்தில் ஊர்வலம் நடத்தி தனியார் திருமண மண்டபத்தில் அழைத்து வந்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் தலைமையில் கட்சி துண்டு அணிவித்து பாஜகவில் இணைத்தார்.


இச்சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்டர் மணிகண்டன் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் புதுச்சேரியின் பிரபல ரவுடியான மர்டர் மணிகண்டன் கடந்த ஆண்டு நடந்த கொலை சம்பவத்தால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஏனாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.


ஏனாம் கிளை சிறையில் மர்டர் மணிகண்டன்


புதுச்சேரியில் பிரபல ரவுடிகள் கருணா, மர்டர் மணிகண்டன், தேங்காய்திட்டு ஜெகன் ஆகியோர் தனி தனிக்கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி மோதல் நிகழும். இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மர்டர் மணிகண்டன், கருணா ஆகியோர் ஆந்திர மாநிலம் அருகேயுள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் கிளை சிறையிலும், தேங்காய்திட்டு ஜெகன் காரைக்கால் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதில், ஒரு வழக்கு தொடர்பாக 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேங்காய்திட்டு ஜெகன், காரைக்கால் சிறைக்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அரியாங்குப்பம் பாலத்தில் மர்டர் மணிகண்டனின் ஆட்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தேங்காய்திட்டு ஜெகனை கொலை செய்தனர். இக்கொலைக்கு பழிக்கு பழி வாங்க மர்டர் மணிகண்டனை கொலை செய்ய ஜெகனின் ஆதரவாளர்கள் திட்டமிட்டனர்.


இதையடுத்து புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று 2013 ஆகஸ்ட் மாதம் ஏனாம் சென்று அங்குள்ள லாட்ஜில் தங்கியது. 2013 ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அதிகாலை இக்கும்பல் இரண்டு ஏணிகளை பயன்படுத்தி, சுமார் 25 அடிஉயரம் உள்ள ஏனாம் சிறைச் சுவரில் ஏறி சிறைக்குள் நுழைந்தனர். கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், நைலான் கயிறு, மிளகாய் பொடி, இரண்டு பெட்ரோல் கேன்கள், டேப்கள் ஆகியவற்றுடன் சிறைக்குள் புகுந்த அக்கும்பல், வார்டன் சேகரின் கை, கால்களை கட்டி, வாயில் டேப்பை வைத்து அடைத்தது.இதை தொடர்ந்து குற்றவாளி அறையின் சாவியை தேடினர். மற்றொரு வார்டன் செல்வம் இதை கவனித்து விசில் ஊதியுள்ளார். இதையடுத்து ஐஆர்பிஎன் போலீஸார் அங்கு ஓடி வந்தனர். இதை தொடர்ந்து அக்கும்பல் கொலை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. ஏனாம் எஸ்.பி புருஷோத்தமன் தலைமையிலான போலீஸ் குழுவினர் அக்கும்பலை துரத்திச் சென்றனர். கிளை சிறையிலிருந்து இருந்து பல கி.மீ தொலைவில் அக்கும்பலை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மொத்தம் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.