கள்ளக்குறிச்சி: விசிக மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வது குறித்து மூத்த தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை முஸ்லிம்லீக் முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் கட்சி சால்வை அணிவித்து வரவேற்றார்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு விடுத்தால் அதிமுக கலந்து கொள்வது குறித்து மூத்த தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் திமுக மட்டும் தான் எங்களுக்கு எதிரணி. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர நல்ல மனம் உடையவர்கள் அதிமுகவுடன் ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வந்தால் இணைத்துக் கொள்ளவும் அவர்களுடன் சேர்ந்து அதிமுக சிறந்த ஆட்சியை கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.




சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சிவி சண்முகம் எம்பி புகார் 


இந்த நிலையில் நேற்று மாலை சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறான கருத்துக்கள் பரப்பப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன் புகார் மனுவை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து செய்தி அவர்களிடம் பேசிய செய்தி சிவி.சண்முகம்:


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில் நான் அதிமுக சார்பில் கலந்து கொள்ளப்போவதாகவும், அதில் நான் உரையாற்றப்போவதாகவும் கூறி சில கருத்துக்களை பதிவிட்டு நியூஸ்.ஜெ தொலைக்காட்சி இந்த செய்தியை வெளியிட்டதாக கூறி பொய்யான பதிவை சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இது முழுக்க, முழுக்க தவறான, பொய்யான பதிவாகும். இது திட்டமிட்டு என் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த குற்றச்செயலை செய்திருக்கிறார்கள். இந்த செய்தியை பதிவிட்டு, சமூக வலைதளங்களில் பரப்பிய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இது முதல் சம்பவம் அல்ல இதற்கு முன்பாக நாடாளுமன்ற தேர்தல் அன்று என்னுடைய லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தி குறிப்பிட்ட சிலருக்கு வாக்களிக்க வேண்டும் என நான் கருத்து கூறியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே புகார் அளித்துள்ளேன் ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை. இதேபோல் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலின் போதும் நான் குறிப்பிட்ட கட்சியையும், அதன் தலைவரையும் தரக்குறைவாக பேசியதாக அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் சொல்லியதாக பொய்யான தகவலை மீண்டும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. அது குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் ஆனால் நடவடிக்கை இல்லை.


திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த மூன்றாண்டு காலத்தில் எனக்கு பல்வேறு கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், ஆபாச பேச்சுகள் தொடர்பாக 23 புகார்களை இதுவரை கொடுத்துள்ளேன் ஆனால் இன்று வரை ஒரு புகாரின் மீதும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு நேர் மாறாக என் மீது வழக்கு போடுவதில் காட்டும் முனைப்பை, நான் கொடுக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்குகிறது. திமுக அரசே இதற்கு உறுதுணையாக செயல்படுகிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்படிப்பட்ட தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள் சிலரை குறிப்பிட்டு புகார் கொடுத்துள்ளேன். 


விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டிற்க திருமாவளவன் அழைப்பு கொடுத்திருந்த நிலையில் அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிவி.சண்முகம்:


விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதா, இல்லையா என்பது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் முடிவு செய்வார் என தெரிவித்தார்.