விழுப்புரம்: தமிழகத்தைப் பெண் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, 'பெண் உரிமை மாநிலமாக' முதல்வர் மு.க. ஸ்டாலின் மாற்றி வருவதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அன்பகம் திறப்பு விழா

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அன்னியூர் கிராமத்தில் புதிதாக 'அன்பகம்' கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்தபடி காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, அன்னியூரில் நடைபெற்ற விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா ஆகியோர் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தனர்.

Continues below advertisement

எடப்பாடி பழனிசாமிக்குக் கடும் விமர்சனம்

விழா மேடையில் தொண்டர்களிடையே உரையாற்றிய பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடினார். அவர் பேசுகையில் 

 "டெல்லியில் உள்ள பிரதமர் மோடிக்குக் 'காவடி' தூக்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் அவர்கள் செய்யவில்லை."

பெண் உரிமையும் திராவிட மாடலும்

தமிழக அரசின் மகளிர் நலத்திட்டங்கள் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "பெண்கள் என்றால் உரிமை இல்லாதவர்கள் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால், இன்று பெண்களின் வளர்ச்சிக்காகவே 'திராவிட மாடல்' ஆட்சி நடைபெறுகிறது. பெண்களின் உரிமையை நிலைநாட்டவும், அவர்களைப் பொருளாதார ரீதியாக உயர்த்தவும் 5,000 ரூபாய் உதவித்தொகையை முதல்வர் வழங்கியுள்ளார்.

 தமிழகத்தை இன்று ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் 'பெண் உரிமை மாநிலமாக' முதல்வர் மாற்றியுள்ளார்," என்றார்.

மக்களுக்கான ஆட்சி

"எல்லோருக்கும் எல்லாம்" என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் தரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பல வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை நிறைவேற்றி வருவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.