வங்கக்கடலில் அந்தமான் அருகே நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதனால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘ஜாவத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தாழ்வு மண்டலம் புயலாக மாறியது அதை அடுத்து கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் கூண்டுக்கு பதிலாக, நேற்று மாலை 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு எந்தவித நேரடி பாதிப்பும் இருக்காது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
காலை முதல் வானிலையில் எந்த மாற்றமும் இன்றி வானம் தெளிவாக காணப்பட்டு வருகிறது, இந்நிலையில் இன்று காலை முதல் கடலூரில் தாழங்குடா, மற்றும் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை ஆகிய கடற்கரைகளில் கடலின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. மேலும் கடலின் இயல்பாக இருக்கும் அளவை விட கடல் சுமார் 10 மீட்டர் அளவிற்கு அதிகமாக முன் வந்து காணப்படுகிறது. இதன் காரணமாக தேவனாம்பட்டினம், மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும் தாழங்குடா பகுதி மீனவர்கள் சில பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்று இருந்த நிலையில் கடலின் சீற்றம் அதிகமாதால் மீண்டும் வேகமாக கரைக்கு திரும்பினர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில் நேற்று காலை முதல் இரவு வரை கடல் சீற்றம் இன்றி காணப்பட்டு வந்தது, இந்நிலையில் ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா இடையே ஜவாத் புயல் இன்று கரையை நெருங்கி கரையை கடக்கும் என கூறப்பட்டு உள்ளது, இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி முதல் திடீரென கடல் வழக்கத்தை விட சீற்றமாக காணப்பட்டது இதன் காரணமாக இன்று மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை மேலும் நேற்றே கடலுக்கு சென்றவர்களும் விரைந்து கரைக்கு திரும்பினர்.
ஏற்கனவே கடந்த சில வாரங்களாக கடலூரில் தொடர்ந்து மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடலுக்கு சரியாக செல்ல முடியாமல் தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு அடைந்து உள்ளது ஆகையால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர். மேலும் கடலின் சீற்றம் தற்பொழுது வரை குறையாமல் உள்ள நிலையில், கடலின் சீற்றம் குறைந்த பிறகு தான் மீன் பிடிக்க கடலுக்குள் செல்வோம் என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.