விழுப்புரம்: திண்டிவனத்தில் தேர்தல் முன் விரோதத்தில் பாமக நிர்வாகியை சரமாரியாக தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியை சேர்ந்தவர் முஹம்மத் நசீர் இவர் அந்த பகுதியில் பிஸ்கட் , சாக்லேட் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பாமகவில் சிறுபான்மை அணி நிர்வாகியாக உள்ளார். முஹம்மத் நசீர் கடந்த தேர்தல்களில் முன்னாள் கவுன்சிலர் திமுக நிர்வாகி பாஸ்கருக்கு எதிராக தேர்தல் வேலை செய்துள்ளார். முன் விரோத பகை இவர்களுக்குள் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த வழியாக வந்த திமுக நிர்வாகி முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது, அப்போது திடீரென முகமது நசீரை பார்த்து ஆபாசமாக பேசி உள்ளார். ஏன் இது போல பேசுகிறீர்கள் என முகமது நசீர் கேட்டு உள்ளார். நீ எனக்கு எதிராக கட்சி வேலை செய்தாய் என பேசி மீண்டும் அவரை அசிங்கமாக திட்டி திடீரென அவரை சரமாரியாக தாக்கினார்.
அருகில் இருந்தவர்கள் முகமது நசீரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். திமுக நிர்வாகி தாக்கிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து முகமது நசீர் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் முன் விரோதத்தில் பாமக நிர்வாகியை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.