கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி  பழுப்பு நிறுவனத்தின் தொமுச அலுவலகத்தில் 60ஆம் ஆண்டு விழா மற்றும் முன்னாள் தொமுச பேரவை தலைவர்  குப்புசாமி எம்பி அவர்களின் சிலை திறப்பு விழா என்எல்சி தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு என்எல்சி தொமுச பொதுச் செயலாளர் பாரி தலைமை தாங்கினார்.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தொமுச பேரவை பொதுச்செயலாளர்  சண்முகம் எம்பி, நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன்,  தொமுச அமைப்பு செயலாளர் வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் தொமுச பேரவை தலைவர் குப்புசாமி எம்பி அவர்களின் சிலையை திறந்து வைத்து, ஓய்வு பெற்ற சங்க உறுப்பினர்களின் பயண்பாட்டிக்காக சங்க வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் புனரமைக்கப்படட நான்கு தங்கும் விடுதி அறைகள் மற்றும் ஆலோசனைக்கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தனர். 

 

 கூட்டத்தில் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், ”பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றிய அரசில் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த போது குறிப்பாக நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த போதிலும் என்எல்சி தொழிலாளர்களுக்கும் இந்த பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் என்ன நலன் செய்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். அன்புமணி என்எல்சி நிறுவனத்திற்கு பூட்டு போடுவோம் என மேற்கொண்ட போராட்டம் ஏற்புடையதல்ல.

 

 என்.எல்.சியில் பணிபுரியக்கூடிய நிரந்தர தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் மறைமுக தொழிலாளர்கள் என முப்பதாயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு. கடந்த பத்தாண்டு கால ஆட்சியில்  அங்கம் வகித்த பாட்டாளி மக்கள் கட்சி இப்பகுதி மக்களுக்கு என்ன நன்மை பெற்று தந்தது.

 

 திமுக ஆட்சி காலத்தில் தான் ஒரு லட்சம் என இருந்த இழப்பீட்டை ஆறு லட்சம் அடுத்ததாக 15 அடுத்ததாக தற்போது 25 லட்சம் என உயர்த்தி உள்ளது. திமுக அரசு எப்போதும் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் துணை நிற்கும் அரசு. வாக்கு வங்கிக்காக நாடகம் ஆட வேண்டிய அவசியம் திமுகவிற்கு என்றைக்கும் இருந்ததில்லை. என்எல்சிக்கு நிலங்களை வழங்க மக்கள் தயாராக இருக்கும் பட்சத்தில் இப்பகுதி மக்களுக்கு ஒன்றுமே செய்யாத அன்புமணி மேற்கொண்ட நடைபயணம் என்ற நாடகத்தை மக்கள் எப்போதும் நம்ப மாட்டார்கள்.

 

என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்சம், மாற்று குடியிருப்பு, வேலைவாய்ப்பு வேண்டாம் என்றால் 17 லட்சம் இழப்பீடு என உயர்த்தப்பட்ட இழப்பீடு வழங்குவதுடன் வேலை வாய்ப்பு கோரும் நபர்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்க என்எல்சி நிர்வாகம் முன் வந்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி போடும் நாடகம் அன்புமணி நடிப்பு இவற்றை ஏதும் இப்பகுதி மக்கள் நம்ப மாட்டார்கள்” என்றார்.

 

என்எல்சி நிறுவனம் தற்போது 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவது ஏன்?. இனி நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி என்எல்சி நிறுவனம் உடனடியாக வெளியேற வலியுறுத்தி 7,8 ஆகிய தேதிகளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இரண்டு நாட்கள் நெய்வேலியில் நடையபயணம் நடைபெற்றது. அப்போது தமிழக அமைச்சர்களின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேளாண்துறை அமைச்சர்கள் விவசாய நிலத்தை என்எல்சிக்கை பிடுங்கி கொடுக்க ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டினார் அதற்கு எம் ஆர் கே பன்னீர் செல்வம் பதில் சாடியுள்ளார்.