விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் நகராட்சியில் நேற்று மாலை நகர மன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அனைத்து கவுன்சிலர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக ரூ.23 கோடி வரி வசூல் செய்யப்பட்ட பணம், 33 வார்டுகளில் என்ன செய்தீர்கள் என அனைத்து கவுன்சிலர்களும் கேள்வி எழுப்பினர்.
பின்னர் நகராட்சி நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். திண்டிவனம் நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதால், கவுன்சிலர்களின் கோரிக்கையை அதிகாரிகள் மதிக்கவில்லை எனவும், அனைத்து நகர மன்ற கூட்டத்திலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இது நாள் வரை எந்த பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை எனவும், அனைத்து வார்டுகளிலும் திட்டப் பணிகள் செய்யவில்லை எனவும் அனைத்து கவுன்சிலர்களும் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிமுக கவுன்சிலர் கார்த்திக் என்பவரிடம் நகராட்சி ஓட்டுநர் மோதலில் ஈடுபட்டது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதற்கு நகராட்சி ஆணையர் உரிய பதில் அளிக்காததால் அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேர் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 14 திமுக கவுன்சிலர்கள் தாங்கள் இருக்கையில் இருந்து எழுந்து நகராட்சி ஆணையர் மற்றும் நகர மன்ற தலைவர் முன்பு தரையில் அமர்ந்து ரூ.23 கோடி வரி பணம் என்னாச்சு என கோஷம் எழுப்பினர். இதனால் நகராட்சியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் திமுக கவுன்சிலர்கள் கூறுகையில், அமைச்சரின் மருமகன் தலையீடு திண்டிவனம் நகராட்சியில் அதிக அளவில் உள்ளதால், அவர் யாருக்கு பணி வழங்க சொல்கிறாரோ அவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.
தொடந்து அமைச்சர் மருமகன் மீது திண்டிவனம் திமுக கவுன்சிலர்கள் தொடந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், சமீபத்தில் முதல்வர் திருவண்ணாமலை செல்லும் போது திமுக கவுன்சிலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முதல்வரிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அவரது மருமகன் மீது புகார் அளித்தனர். வடக்கு மாவட்டத்தை "காப்பத்துங்கள்" "காப்பத்துங்கள்" என கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.