கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கந்தசாமிநாயுடு கல்லூரி, பெரியார் அரசு கலைக்கல்லூரி, வேணுகோபாலபுரம் ஸ்ரீவரதன் மேல்நிலைப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 100 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விடுதியை நேற்று மாவட்டஆட்சியர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சில மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் மாணவிகளின் வருகை பதிவேடு உள்ளிட்ட இருப்பு பதிவேடுகளைஆட்சியர் ஆய்வு செய்தார். விடுதியில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மளிகைப்பொருட்கள் தரமானதாக உள்ளதா? என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சமையல் கூடத்தை ஆய்வு செய்தஆட்சியர், அங்கு தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த மதிய உணவை சாப்பிட்டு பார்த்தார். அதன்பிறகு அங்கிருந்த ஊழியர்களிடம் விடுதியை தொடர்ந்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.முன்னதாக தமிழக அரசு அறிவித்துள்ள ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை' என்னும் உன்னத நோக்கத்தை மேம்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள் வரை உள்ள அனைத்து நிலை ஆஸ்பத்திரிகளிலும் கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதி வரை தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி கடலூர் திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றுஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அப்போது புறநோயாளிகள் பிரிவு, தொற்று நோய் பிரிவு, பிரசவ அறை, ரத்த சேமிப்பு வங்கி, புற்று நோய் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை கூடம் மற்றும் ஆண், பெண் பொது வார்டுகள் உள்ளிட்ட பிரிவுகளிலும் மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவான முறையில் அணுகி அவர்களின் நோய் குறித்த விவரங்களை அறிந்து சிகிச்சை மேற்கொள்ளவும், ஆஸ்பத்திரிக்கு வரும் பொது மக்கள் எளிதாக துறை பிரிவுகளை அறியும் வகையில் வழிகாட்டி பலகைகள் அமைக்கவும் அலுவலர்களுக்குஆட்சியர் உத்தரவிட்டார்.ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மீரா, ஆதிதிராவிட நலத்துறை இளநிலை பொறியாளர் விஸ்வநாதன், வட்டார மருத்துவ அலுவலர் ராஜகணபதி, தலைமை டாக்டர் அமிர்தாதேவி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.