விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமுண்டீச்சரம் கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற செல்வாம்பிகை உடனுறை ஸ்ரீ சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பரால் பாடல் பெற்ற தலமாகும். இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் கி.பி .943-ல் வெள்ளாங்குமரன் மன்னரால் கருங்கல்லால் கட்டப்பட்டதாகும். மேலும், வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற் றுப்பை (பொக்களம்) தந்தார். இதனால் இங்குள்ள கல்வெட்டில் பொக்களம் கொடுத்த நாயனார் என்றும் ஆற்றுத்தளி பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர் என்றும் குறிக்கப்படுகின்றார்.
இந்த கோவிலின் தொன்மை விளக்கும் செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன. தொன்மைக்கும் பழமைக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்ற இக்கோவிலை காண்பதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று கோவிலுக்கு வந்தார். ஸ்ரீசிவலோகநாதர், செல்வாம்பிகையை தரிசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அப்போது கோவில் பிரகார கருங்கல் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். அவரிடம் தொல்லியல் துறை ஆய்வாளர் ராஜா கல்வெட்டுகள் குறித்து எடுத்துரைத்தார். கோவிலின் கருவறையின் பின்புறம் உள்ள கல்லில் செதுக்கப்பட்டிருந்த கல்வெட்டினை ஆளுநர் ரவி பார்வையிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட போலீசாரும் செய்திருந்தனர்.
ஸ்ரீ சிவலோகநாதர் கோவில்
இறைவர் திருப்பெயர்: சிவலோகநாதர், முடீஸ்வரர், முண்டீசர்.
இறைவியார் திருப்பெயர்: சௌந்தர்யநாயகி, கானார்குழலி,
செல்வநாயகி, செல்வாம்பிகை.
தல மரம்:
தீர்த்தம் : முண்டக தீர்த்தம் (அ) பிரம்ம தீர்த்தம்.
வழிபட்டோர்: அப்பர், திண்டி, முண்டி (இவர்கள் இறைவனின் காவலர்களாவர்), பிரமன், இந்திரன் ஆகியோர்
கோவிலின் சிறப்புகள் :
- துவார வாயிலில் விநாயகரும் முருகனும் இடம் மாறியுள்ளனர். (முருகனின் இடக் கீழ்க்கை நாராச முத்திரையுடன் - அகமர்ஷண நீரைக் கீழே விடும் அமைப்பில் - இருப்பது கவனிக்கத் தக்கது.)
- தட்சிணாமூர்த்தி கல்லால மரமின்றி மலைமீது நந்தியை வாகனமாகக் கொண்டு காட்சித் தருகிறார்.சுவாமி அம்பாள் விமானங்கள் மிகப் பழமையானவை.திண்டி முண்டி இருவர் திருவுருவச் சிலைகள் உள்ளன.
- இத்திருக்கோயில் சோழ மன்னர்களில் முதற்பராந்தக சோழன், இரண்டாம் ஆதித்தகரிகாலன், முதலாம் இராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலானோர் காலங்களிலும், பாண்டியர்களில் கோனேரின்மை கொண்டானாகிய சுந்தரபாண்டிய தேவன், வீரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும், இராஷ்டிரகூட மன்னரில் கன்னர தேவர் காலத்திலும், விஜயநகர மன்னரில், வீரவிருப்பண்ண உடையார் காலத்திலும் செதுக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
- இக்கோயில் கி. பி. 943-ல் கேரள மன்னனான வெள்ளாங்குமரன் என்பவனால் (முதற்பராந்தகன் காலத்தில்) கருங்கல்லால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது.
- பழமையான கல்வெட்டுக்களில் திருமுடீச்சரம் என்றே பெயருள்ளது. முடியூர் நாடு என்னும் தனிப் பெயர் கொண்ட நாட்டுக்குத் தலைநகராக இருந்தது.
- மதுரை கோப்பரகேசரி வர்மனின் 24-வது கல்வெட்டில் முடியூர் நாட்டு முடியூர் என்றுள்ளது.சௌந்தரபாண்டியன் காலக் கல்வெட்டில் முடியூர் நாட்டுக் 'கிராமம் ' என்றுள்ளது