புதுச்சேரி: வாட்ஸ் ஆப் குழுக்களில் வங்கிகளின் பெயரில் வரும் போலி லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலி லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்
இதுகுறித்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் கூறுகையில், “வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது SBI, CUB, ICICI, AXIS , HDFC வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும். இதை யாரும் நம்ப வேண்டாம். அந்த லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் க்ளிக் செய்தால் உங்களுடைய மொபைல் போன் ஹேக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர். உங்களின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்படும். சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம்.
பண பரிவர்த்தனை வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், இணைய வழி சம்மந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 1930, 0413-2276144, 94892 05246 எண்கள் மூலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு, சிம்கார்டை யாரிடமும் பகிர வேண்டாம்
மேலும், புதுச்சேரியில் பல்வேறு வகையில், மோசடி கும்பல் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றது. சைபர் கிரைம் போலீசார், லட்ச கணக்கில் ஏமாறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வங்கி கணக்கு, சிம்கார்டை யாரிடமும் கொடுக்க வேண்டாம். மேலும், தங்களுடைய ஆவணங்கள் மூலம் சிம்கார்டு வாங்கி தர வேண்டாம்.
வங்கி கணக்கில் பணம் அனுப்புகிறோம். அந்த பணத்திற்கு கமிஷன் தருகிறேன் என யாராவது கூறினால், நம்பி ஏமாற வேண்டாம். வங்கி, கணக்கு மற்றும் மொபைல் சிம் கார்டை வைத்து, இணையவழி மூலம் மோசடி கும்பல், வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்வார்கள். மோசடி செய்யும் வகையில், வங்கி கணக்கில் பணம் வந்தால் அந்த நபர் மீது சைபர் கிரைம் போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.