கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் என்பவரது மகன் ஆதிநாராயண மூர்த்தி. இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரர் ஸ்ரீராம் என்பவருக்கும் ஆதிநாராயண மூர்த்திக்கும் கடந்த சில வருடங்களாக நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

 

 இந்த நிலையில் நேற்று ஸ்ரீராம் மற்றும் அவரது மனைவி சித்ரா ஆகியோர் ஆதிநாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி இடம் நிலம் சம்பந்தமாக தகராறு செய்துள்ளனர். அப்பொழுது இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டு ஸ்ரீராம் மற்றும் அவரது மனைவி சித்ரா உள்ளிட்டோர் ஆதிநாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி மகேஸ்வரியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

 

 இதில் பலத்த காயமடைந்த ஆதிநாராயணமூர்த்தி மற்றும் அவரது மனைவியை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர. ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆதிநாராயண மூர்த்தி உயிரிழந்தார்.இதை அடுத்து அவரது மனைவி மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராம் மற்றும் அவரது மனைவி சித்ரா உள்ளிட்டவரை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.