கடலூரில் கள்ளக்காதலனை வைத்து கணவனை கொன்று நாடகமாடிய மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி முதன்மை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்தவர் சீனுவாசன். மருந்து விற்பனை பிரதிநிதி மேலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி பண்ருட்டியை சேர்ந்த கல்பனா. 2013 ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி, திருவதிகை, ராசாப்பாளையம் அருகே மர்ம நபர்களால் சீனுவாசன் கொலை செய்யப்பட்டார். அப்போது பண்ருட்டி போலீசார், கல்பனாவிடம் விசாரணை செய்ததில், காரில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல், சீனுவாசனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தனது நகைகளை பறித்துச் சென்றதாக கூறினார்.

 

சந்தேகமடைந்த போலீசார், அவரது மொபைல் போன் அழைப்புகளை வைத்து விசாரணை செய்ததில், கள்ளக்காதல் விவகாரத்தில், கல்பனா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவர் சீனுவாசனை கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் இந்த வழக்கில் தினேஷ் பாபுவும், கல்பனாவும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்ததால் சாதி பிரச்னையால் திருமணம் செய்ய முடியாமல், கல்பனாவின் தோழி வித்யாவை தினேஷ்பாபு திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள், கல்பனாவுக்கும் சீனுவாசனுக்கும் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் கல்பனா, தினேஷ்பாபுவுடனான பழக்கத்தை தொடர்ந்தார். சீனுவாசன் வெளியூர் செல்லும் நேரங்களில், கல்பனா, தினேஷ்பாபுவை சென்னைக்கு வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளார்.



 

இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கல்பனா மற்றும் தினேஷ்பாபு, சீனுவாசனை கொலை செய்ய திட்டமிட்டனர். மே 31 ம் தேதி திருமண நாளையொட்டி கடலூரில் வெள்ளிக்கடற்கரை சென்று, திரைப்படம் பார்த்துவிட்டு, பண்ருட்டிக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டதும், தினேஷ்பாபு மற்றும் அவரது நண்பர் முரளி இருவரும், திருவதிகை.ராசாப்பாளையம் அருகே சீனுவாசனை வழி மறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இவ்வழக்கில் பின்னர் விசாரணையில் கல்பனா கணவரை கொல்ல திட்டம் தீட்டி நாடகமாடியது தெரிவந்தது. வழிப்பறி கொள்ளையில் நடந்த கொலை பிரிவில் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை, திட்டமிட்டு கொலை செய்தல், தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கல்பனா (26) தினேஷ்பாபு (27) முரளி (27) ஆகியோரை கைது செய்தனர்.

 

 இவ்வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த நிலையில் விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜவகர் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றவாளிகள் கல்பனா மற்றும் தினேஷ்பாபு ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கல்பனாவிற்கு 4000 ரூபாயும் தினேஷ் பாபுவிற்கு 3 ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனை அடுத்து கல்பனா வேலூரிலும், தினேஷ்பாபு கடலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.