கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இந்நிலையில் இந்த தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் பெண்ணாடம் அருகே உள்ள துறையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுடுகாடு வசதி இல்லாததால், அப்பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களது உடலை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள வெள்ளாற்றை கடந்து ஆற்றின் மறுகரையில் அடக்கம் செய்வது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெள்ளையன் (65) என்பவர் நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், வெள்ளையனின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது வீட்டில் திரண்டனர். பின்னர் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, கிராம மக்கள் அதே பகுதியில் உள்ள வெள்ளாற்றங்கரைக்கு தூக்கி சென்றனர்.
அப்போது கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வெள்ளாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும் அவர்கள் ஆற்றை நீந்தி கடந்து விடலாம் என்று எண்ணி, வெள்ளையன் உடலை தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கினர். சிறிது தூரம் சென்றதும், ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய நீரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அவர்களால் நீந்த முடியாமல் தத்தளித்தனர். இதனால் அவர்கள் ஆற்றை கடக்க முடியாமல், மீண்டும் கரைக்கு திரும்பினர். மேலும் ஆற்றின் கரையோரம் இருந்த தனிநபருக்கு சொந்தமான நிலத்தில் வெள்ளையனின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். அப்போது அங்கு வந்த முருகன்குடியை சேர்ந்த மாயவேல் என்பவரின் மகன் குமார் என்பவர், அந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும், அதனால் அந்த இடத்தில் உடலை அடக்கம் செய்யக்கூடாது என்று கூறி கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி அறிந்த பெண்ணாடம் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து பிரச்சினைக்குரிய அந்த இடத்தை வருவாய்த்துறை மூலம் அளவீடு செய்து தருவதாக காவல் துறையினர் கூறினர். அதனால் மாயவேல் அங்கிருந்து சென்றார். இதையடுத்து அந்த இடத்தில் வெள்ளையனின் உடலை கிராம மக்கள் அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் யாரேனும் இறந்தால் அவர்களது உடலை வெள்ளாற்றின் கரையில் அடக்கம் செய்வது வழக்கம். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, இறந்தவர்களின் உடல்களை தூக்கி செல்ல முடியவில்லை. இதனால் கிராமத்தின் அருகில் சுடுகாடு அமைத்து கொடுக்க வேண்டும் என்றனர்.