கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் நபிஸ் என்பவரின் வீட்டில் நேற்று இரவு அவரது நண்பர்களான நபிஸ், மனோஜ் பிரேம்குமார், கலைச்செல்வன் உள்ளிட்டோர் மது அருந்தி உள்ளனர், பின் அவர்களின் மற்றொரு நண்பரான அருண் என்பவரை மது அருந்த அழைத்த்தாக கூறப்படுகிறது. அப்போது, அருணுக்கும் பிரேம்குமார் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் பிரேம்குமார் அருனை இடுப்பு பகுதியில் கத்தியால் குத்தியதால் ரத்தம் சொட்டிய நிலையில் இருந்த அருணை காப்பாற்ற நண்பர்கள் வீட்டில் இருந்து அருணை தூக்கி வந்து சாலையில் படுக்க வைத்துள்ளனர். பின்பு, மனோஜ் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்ததாகவும், ஆம்புலன்ஸ் வந்தவுடன் ரத்தவெள்ளத்தில் இருந்த அருனை ஆம்புலன்சில் நண்பர்கள் ஏற்றி அனுப்பியுள்ளனர்.  பின் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அருண் உயிருக்கு போராடிய நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

 



 

விசாரணையில் உயிரிழந்த அருண் என்பவர் ஆண்டிமடம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த ஏசுராஜ் என்பவரின் மகன் என்றும், நீண்ட காலமாக அவரது பெற்றோர்கள் விருத்தாசலம் பகுதியில் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருவதாகவும் தெரிந்தது, இந்நிலையில், அருண் (25) திருமணம் செய்து கொண்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனது சொந்த ஊரில் அருண் வசித்து வருவதாகவும், அவ்வபோது விருத்தாசலத்தில் தன் தாயார் குடியிருக்கும் வீட்டிற்கு வருவதாகவும் அப்பொழுது தன் நண்பர்களை சந்திப்பதாகவும் கூறப்படுகிறது. பிரேம் குமார், மனோஜ், கலைச்செல்வன், மற்றும் அருண் ஒன்றாக படித்த நண்பர்கள் என்றும் நான்கு பேரும் நெடு நாட்களாக நண்பர்களாக இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அருணின் கைப்பேசியை கைப்பற்றிய காவல் துறையினர் அதனை வைத்து விசாரித்த பொழுது,

 



 

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பிரேம்குமார், அருண் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, இதனால் ஆத்திரமடைந்த பிரேம் குமார் நேற்று அண்ணாநகர் பகுதியில் உள்ள மனோஜ், கலைச்செல்வனின் நண்பன் நபிஸ் வீட்டில் நான்கு பேரும் இருந்துள்ளனர். பிறகு, அய்யம்பேட்டையில் இருந்த அருணை வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். பின்பு, வாய்த்தகராறு ஏற்பட்டு பிரேம்குமார், அருணை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விருத்தாசலம் காவல் துறையினர் மனோஜ், கலைச்செல்வன் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின் முக்கிய குற்றவாளி பிரேம்குமார் மற்றும் நபிஸ் இருவரை காவல் துறையினர் தேடி வந்தனர், பின்னர் 4 மணி நேரத்தில் அவர்களையும் கைது செய்துள்ளது காவல் துறை. ஒரே பெண்ணை இரு நண்பர்கள் காதலித்து அதற்காக ஒருவரை மற்றொருவர் கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.