குடும்ப தகராறில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவகாரத்தில் கணவன் மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

 

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் - செல்வி தம்பதியருக்குத் தமிழரசி (30) மற்றும் தனலட்சுமி (27) என்று இரண்டு மகள்கள் உள்ளனர். தங்கள் மகள்கள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதில் தனலட்சுமிக்குக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சற்குரு (32) என்பவரைத் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 8 மாதம் குழந்தை உள்ளது. கடந்த ஓர் ஆண்டாகத் தனலட்சுமி மற்றும் சற்குரு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவன் - மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

 

கடலூர் அருகே உள்ள செல்லாங்குப்பத்தில் அக்கா தமிழரசி வீட்டிற்கு வந்த தனலட்சுமியை கணவர் சற்குரு, விவாகரத்து கேட்டு மிரட்டும் வகையில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவகாரம் நேற்று கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், கணவன் மனைவி பிரச்சினையில் அக்கா தமிழரசி, கைக்குழந்தைகள் ஹாசினி, லக்ஷன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.



 

இந்த விவகாரம் தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் மற்றும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி மற்றும் செல்வியிடம் கடலூர் மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி வனஜா வாக்குமூலம் பெற்றார். அதனை அடுத்து சத்குரு கொலை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த வாக்குமூலத்தினால் திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனலட்சுமி தன்னை மிரட்டுவதற்காக சத்குரு பெட்ரோலை அவர் உடல் மீது ஊற்றிக் கொண்டதாக கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்நிலையில் சற்குரு, தனலட்சுமி மற்றும் தனலட்சுமி தாயார் செல்வி பலத்த காயங்களோடு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சற்குரு உயிரிழந்தார், தொடர்ந்து சிகிச்சையில் இருந்த தனலட்சுமி நள்ளிரவு உயிரிழந்துள்ளார். 85 சதவீத காயங்களோடு சிகிச்சை பெற்று வந்த செல்வி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

விவாகரத்து தர மறுத்த மனைவியை மிரட்டிய கணவன், அவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.