கடலூர் அரசு மருத்துவமனைக்கு சளி பிரச்னைக்காக சிகிச்சைக்கு வந்த 13 வயது சிறுமிக்கு நாய்க்கடி ஊசி செலுத்திய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 





கடலுார் அடுத்த கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன், இவர் மகள் சாதனா, (13) எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு சளி தொந்தரவு காரணமாக, கடந்த 27ஆம் தேதி காலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு, அவரது தந்தை கருணாகரன் அழைத்து சென்றுள்ளார்.

 

அரசு மருத்துவமனையில் சாதனாவை பரிசோதனை செய்து, ஊசி மற்றும் மாத்திரைகள் எழுதி கொடுத்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கிக்கொண்டு, ஊசி போட சென்ற நிலையில் அங்கிருந்த செவிலியர்கள், சாதனா கொடுத்த டாக்டர் சீட்டை வாங்கிப் பார்க்காமல், இரண்டு ஊசிகளை போட்டு உள்ளனர்.

 

அப்போது, 'சீட்டை பார்க்காமல் என்ன ஊசி போடுகிறீர்கள்? என சிறுமியின் தந்தை கருணாகரன் கேட்டார். செவிலியர்கள், 'நாய் கடிக்கு இரண்டு ஊசி தான் போடுவார்கள்' என கூறியுள்ளனர். கருணாகரன், சளி பிரச்னைக்கு ஊசி போட வந்ததாக கூறியதால், செவிலியர்கள் மழுப்பலாக பேசியுள்ளனர். மேலும், 'தெரியாமல் தவறு நடந்து விட்டது, மன்னித்துவிடுங்கள்' என கூறி உள்ளனர். அப்போது, திடீரென மயங்கிய சாதனாவை உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

பணியில் அலட்சியமாக இருந்து சிகிச்சை அளித்த செவிலியர்கள், பணியில் இருந்த டாக்டர் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாகரன் கடலுார் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கருணாகரன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்பதாக தெரிவித்தார்.

 

தற்போது சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி செலுத்திய விவகாரம் தொடர்பாக 

மருத்துவமனை செவிலியர் கண்ணகியை பணியிடை நீக்கம் செய்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனை துணை இயக்குநர் உத்தரவிட்டார்.

 

பிரசவ அறுவை சிகிச்சையின் போது கர்ப்பப்பையுடன் சேர்த்து குடல் தைக்கப்பட்ட விவகாரம் கிளம்பிய பரபரப்பு ஓய்வதற்குள், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மேலும் ஒரு சர்ச்சையாக சளி சிகிச்சைக்கு வந்த சிறுமிக்கு நாய்கடி ஊசி போட்ட சம்பவமும் அரங்கேறி உள்ளது. 

 

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடலூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.