கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள இளம்மங்கலம் எனும் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழரசன் என்பவரின் பெட்டிக் கடையில் பொருட்கள் வாங்கிய இரண்டு மர்ம நபர்கள் 500 மதிப்புள்ள நோட்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். கடையில் கூட்டம் குறைந்த பிறகு அதனை பார்த்த கடை உரிமையாளர் தமிழரசன், அதனை கள்ள நோட்டு என உறுதிப்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 



 

பின்னர் புகாரின் பேரில் திட்டக்குடி காவல் துறையினர் பெட்டி கடை அமைந்து உள்ள பகுதியை சுற்றி உள்ள இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது அது திட்டக்குடி வதிஷ்டபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி கௌதமி (32), இவரும் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் செந்தில்குமார் (45) என்பவர் என்பதும் தெரிய வந்தது.



 

பின்னர் கௌதமியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் வீட்டில் வைத்து இருந்த 26,500 ரூபாய் மதிப்பு உள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்தனர் மற்றும் கௌதமிக்கு கள்ளநோட்டு கொடுத்த செந்தில்குமார் அவரையும் கைது செய்து மேலும் கள்ள நோட்டுகள் திட்டக்குடி பகுதியில் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளனவா வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் இது எவ்வாறு அவர்களுக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



 

மேலும், அந்த பகுதியை சுற்றி கள்ள நோட்டு புழக்கம் உள்ளதா என்பன குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் இது போல் கள்ள நோட்டு புழக்கத்தை அதிகரிக்க விடாமல் தொடக்கத்தில் இருந்தே இந்த கள்ள நோட்டு விவகாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குற்றம் செய்தவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.இந்த நிலையில் ஒரு வீட்டில் மட்டும் இருந்து 26,500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் திட்டகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.