கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட விவசாயிகள் வேளாண் துறை சார்ந்த அதிகாரிகள் பங்குபெற்றனர். ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து பேசினர். இதில் கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்போடு வழங்கக்கூடிய பொங்கல் கரும்பில் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது ஆனால் இதில் இடைத்தரகர்கள் தலையிட்டால் விவசாயிகள் பெருமளவு ஏமாற்றமடைந்துள்ளனர்.

 



 

எனவே அடுத்த ஆண்டுக்கான பொங்கல் தொகுப்பு வழங்கக்கூடிய பொங்கல் கரும்பினை தற்போது விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் இடைத்தரகர்களை தலையீட்டை தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு பொங்கல் கரும்பை அரசு எடுக்கும் நிலையில் சாகுபடிக்கு முன்னதாகவே விஏஓ மூலம் பதிவு செய்யும் முறையை நடைமுறை செய்தால் இடைத்தரகர்களை தலையீட்டை தடுக்க முடியும்.எந்த வித ஏமாற்றமும் இல்லாமல் விஏஒ மூலம் பதிவு செய்த விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்து கொள்ளலாம் எனவே தற்போது விஏஓ மூலம் பதிவு செய்யும் முறையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

 



 

மேலும் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்ட அம்பிகா, ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் போலியாக கடன் பெற்றதால் கடந்த நான்கு ஆண்டுகளாக 2 சர்க்கரை ஆலைகளும் மூடப்பட்டு உள்ளது, இதனால் விவசாயிகள் கடுமையாக சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர், எனவே அம்பிகா ஆரூரான் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 



 

இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தின் முக்கிய ஏரிகள் ஆக கருதப்படும் வெல்லிங்டன் ஏரி, பெருமாள் ஏரி, மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பிரதான ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரி ஆகியவை பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருப்பதாகவும் அதனை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

 

மேலும் இன்னும் சில மாதங்களில் முந்திரி சாகுபடி தொடங்க உள்ள நிலையில் முந்திரி மரங்களை தாக்கும் நோய்கள் குறித்தும் பூச்சிகள் குறித்தும் அதனை அழிக்கும் வழிமுறைகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முந்திரி விவசாயிகளுக்கும் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு தர வேண்டும், அதுமட்டுமின்றி முந்திரி மரங்களுக்கு பூச்சி மருந்து மருந்து தெளிக்க விவசாயிகளிடம் போதிய உபகரணங்கள் இல்லை வெறும் கையால் அடித்து தெளிக்கும் சின்ன மிஷின்களே உள்ளன ஆகையால் மாவட்ட நிர்வாகம் மரங்களுக்கு மருந்து அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் விவசாயிகள் சார்பில் கோரிக்கை முன் வைக்கப் பட்டன.