கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காந்தி வீதியை சேர்ந்தவர் பாண்டியன் (35). தொழிலாளி. இவருடைய மனைவி விஜயஸ்ரீ (30). நேற்று மதியம் பாண்டியன் வீட்டுக்கு 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வந்து உள்ளார். அப்போது அந்த நபர் விஜயஸ்ரீயிடம், இரவு நேரத்தில் காத்து கருப்பு தாக்கியது போல் நீங்கள் பயந்து அலறியதாக உங்கள் கணவர் பாண்டியன் என்னிடம் கூறினார், ஆகையால் நான் நேரில் வந்து காத்து கருப்பை விரட்டி சரி செய்வதற்காக வந்து உள்ளேன் என கூறி உள்ளார்.
அதற்கு விஜயஸ்ரீ இது சம்பந்தமாக எனது கணவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லையே ஆகையால் நீங்கள் செல்லுங்கள் என கூறி உள்ளார். ஆனால் அந்த வாலிபர், உங்களது கணவர் பாண்டியன் காத்து கருப்பை விரட்டுமாறு என்னிடம் தெரிவித்து விட்டு தற்போது தான் வெளியில் சென்று உள்ளார். எனவே நீங்கள் கழுத்தில் அணிந்து உள்ள தாலி சங்கிலியை கழற்றி, அருகில் பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போடுமாறு கூறி உள்ளார். இதை நம்பிய விஜயஸ்ரீ, தான் கழுத்தில் அணிந்து ருந்த 6 பவுன் தாலி சங்கிலியை கழற்றி அருகில் உள்ள பாத்திரத்தில் போட்டு உள்ளார்.
இதை அடுத்து அந்த வாலிபர் பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து விஜயஸ்ரீயின் முகத்தில் தெளித்தார், தொடர்ந்து வீட்டுக்குள் சென்று முகத்தை கழுவிவிட்டு வருமாறு, விஜயஸ்ரீயிடம் கூறி உள்ளார். இதனை தொடர்ந்து விஜயஸ்ரீ வீட்டுக்குள் சென்று முகத்தைக் கழுவி விட்டு வெளியில் வந்து பார்த்தார். அப்போது அந்த நபரை காணவில்லை. மேலும், அவர் வைத்திருந்த பாத்திரம் மற்றும் அதில் போடப்பட்ட, தாலி சங்கிலியையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயஸ்ரீ தன்னிடம் காத்து கருப்பை விரட்டுவதாக கூறி நூதன முறையில் தாலி சங்கிலியை திருடிச்சென்று இருப்பது பின்னர் தான் தெரிய வந்தது.
பின்னர் இதுபற்றி விஜயஸ்ரீ நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சேன்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நகர்புற உள்ளாட்சி தேர்தல் - விழுப்புரம் மாவட்டத்தில் 210 பதவியிடங்களுக்கு நாளை வேட்புமனு தாக்கல்