தெலங்கானாவில் தேசியக்கொடியை ஏற்றி விட்டு புதுச்சேரிக்கு தனி விமானத்தில் வந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை தேசியக் கொடியேற்றினார். அதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு, காவலர் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து விருதுகள், பதக்கங்கள், பரிசுகள் வழங்கி பல்வேறு படைபிரிவினரின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


குடியரசு தினவிழா ஆளுநர் தமிழிசை உரை: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, 2050ஆம் ஆண்டில் உலகின் பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் நாடாக மட்டுமல்லாமல் மரபுகளையும் மாண்புகளையும் போற்றுகின்ற நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியா இன்று கலாசாரத்தில் மட்டுமல்லாமல் அறிவியல் ஆராய்ச்சி துறையிலும் முன்னோடி நாடாக உலக அரங்கில் பீடுநடை போட்டு வருகிறது. பிரதமரின் தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் உள்நாட்டில் தயாரான தடுப்பூசிகள் 160 கோடிக்கும் மேல் செலுத்தப்பட்டிருக்கிறது. நமது நாட்டில் தயாரான தடுப்பூசி 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.



பிரதமரின் வழிகாட்டுதலின் நெருக்கடியான கொரோனா பெருந்தொற்று சூழலில் இருந்து இந்தியா மீண்டெழுந்திருக்கிறது. தேசிய அளவில் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி இருந்து வருகிறது. 2021ம் ஆண்டில் பொது நிர்வாக குறியீடுகளின் அடிப்படையில் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் யூனியன் பிரதேசமாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரம், கல்வி, சமூக நலத்துறைகளில் புதுச்சேரி முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.


பெண்கள் பொது போக்குவரத்தில் பாதுகாப்பாக பயணிப்பதற்கு உதவியாக வாகன இயக்க கண்காணிப்பு மையம் ஒன்று போக்குவரத்து துறை வளாகத்தில் ரூ.4.60 மதிப்பீட்டில் நிறுவப்பட உள்ளது. இதற்கான நிதி நிர்பயா திட்டத்தின் கீழ் பெறப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.



கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த 11 குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த 378 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் மறுவாழ்விற்கு தேவையான உணவு, இருப்பிடம் மற்றும் கல்வி ஆகியவை தொடர்ச்சியாக கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு பிரதம மந்திரி பாதுகாப்பு நிதி ரூ.10 லட்சம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயர்த்த தேசிய கூட்டுறவு அபிவிருத்திக் கழகத்திடம் நிதி உதவி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை கூட்டுறவு கட்டிட மையத்தின் மூலமாக பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு மணல் விநியோகிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்காக மணமேடு தென்பெண்ணை ஆற்றில் குவாரியை பயன்படுத்த வருவாய்த்துறைக்கு உரிமைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற மின்வசதி திட்டத்தின் மூலம் மின் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20.05 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையற்ற, தரமான மின் விநியோகம் உறுதி செய்யப்படும்.


இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் காற்றை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையை புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் மாசற்ற மாநிலமாக புதுச்சேரியை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்தும் பணிக்காக ரூ.15.57 கோடி பேரிடர் மீட்பு துறை மூலமாக ஒதுக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.7.65 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கோவிட் சூழல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்ற போதிலும், மாநிலத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தவதற்கான வாய்ப்புகளை அளித்திருக்கிறது.



புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஆன்மீக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கல்வி சுற்றுலா மற்றும் இயற்கை சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கான அம்சங்களுடன் 5 கடற்கரை பகுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.


வில்லினூர் சுடுமண் பொம்மைகள் மற்றும் திருக்கனூர் காகித பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது புதுவைக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. புதுச்சேரி சுண்ணாம்பாற்றையும், காரைக்கால் அரசலாற்றையும் சுத்தப்படுத்துவதற்கான செயல்தி்ட்டத்தை மாசு கட்டுப்பாட்டு குழுமம் தயாரித்து செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்படும் தொழில்நுட்ப கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தும் முயற்சியான முதலாவது மாநில பல்கலைக்கழகமாக புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பும், மக்களின் ஒத்துழைப்பும் மேம்பட்டு இந்த அரசு மேலும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை என கூறினார்.