தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்திலும் அதன் வேகம் தற்போது அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கூடுதல் கட்டுப்பாடுகளையும், இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரம் தோரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கினை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபட்டு உள்ளது. கடலூர் மாநகராட்சி மற்றும் பல்வேறு நகராட்சி பகுதிகளில் நிர்வாகம் சார்பில் வாகங்கள் மூலமாக ஒலி பெருக்கி கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கினை அடுத்து கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 54 சோதனைச் சாவடிகள் அமைத்து 1400 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடலூர் புதுவை எல்லையிலும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். புதுவை மாநிலத்தில் ஊரடங்கு இல்லாத்த காரணத்தினால் வழக்கம் போல் மதுகடைகள் இயங்கி வந்தன. ஆனால் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மதுகடைகள் மூட்டப்பட்டு இருந்த காரணத்தினால் தமிழக மதுபிரியர்கள் நடந்தே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சென்று மது குடித்துவிட்டு வந்த வண்ணம் இருந்தனர். அதன்படி கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் பத்மா, துணை ஆய்வாளர் சீனிவாசன், ஏட்டுகள் பாண்டியன், தனசேகர் ஆகியோர் வண்டிப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு உள்ள திருமண மண்டபம் அருகில் நின்றுகொண்டு இருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். மேலும் அவரது சட்டையை கழற்றி சோதனை செய்தபோது, தலா 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட சாராய பாக்கெட்டுகளை கோர்த்து கவச உடை போல் அணிந்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கிராமத்தை சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 35) என்பதும், புதுச்சேரியில் 40 சாராய பாக்கெட்டுகளை வாங்கி, அதனை மொத்தமாக கவச உடை போல் கோர்த்து அதனை உடலில் அணிந்து கடலூருக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் சாராய பாக்கெட்டுகளும் அமலாக்க துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்டது.