இந்தியா முழுவதும் இன்று அனைத்து மாநிலங்களிலும் 73வது குடியரசு தின விழா கொரோனா கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே போல் கடலூர் மாவட்டத்திலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் இல்லாமல் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்திய திருநாட்டின் 73-வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் காலை 8.05 மணியளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) திரு.ரஞ்ஜீத் சிங், அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார், பின்னர் நமது தேசிய கொடியின் மூன்று வர்ணம் பொருந்திய பலூன்களை காற்றில் பொறுப்பு ஆட்சியர் மற்றும் கடலூர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ஆகியோர் பறக்க விட்டனர், அதனை தொடர்ந்து திறந்த ஜீப்பில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

 



 

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவலர் பதக்கங்களை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 86 காவலர்களுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். மேலும் கொரோனா காலகட்டங்களிலும் தங்களது துறைகளில் பணியாற்றிய, மற்றும் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் பல்வேறு துறைகளைச் சார்ந்த 139 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார், மேலும் கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன, இதில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு, மற்றும் கொரோனவால் பாதிக்கப்பட்டு நபர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்த நபர்களையும் கௌரவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 



 

அதனை தொடர்ந்து மஞ்சகுப்பத்தை சேர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகி  ஏகாம்பரம் அவர்களுக்கு பொறுப்பு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யபட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதால் பொறுப்பு ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார், மேலும் பொறுப்பு ஆட்சியர் ரஞ்சித் சிங்கும், மாவட்ட ஆட்சியருடன் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு தின நிகழ்ச்சியின் பொழுது கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேசன், கூடுதல் ஆட்சியர் பவன்குமாா் ஜி. கிாியப்பனவா், கடலூர் சார் ஆட்சியர் அதியமான் கவியரசு மற்றும் இதர அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.